உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதி காவல் துறைமா அதிபர்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மதிப்பீட்டு கூட்டமொன்றை நடத்துவது வழமை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீட்டு அறிக்கையொன்றை நாங்கள் பெறுவது வழமை என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் என்றால் ஜனாதிபதி அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் நாங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வோம் என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பில் ஏப்பிரல் 12ம் திகதி ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு குறித்து முன்கூட்டிய பாதுகாப்பு மதிப்பீடுகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.