வங்கதேசத்தில் புரிகங்கா ஆற்றில் படகுடன் மோதி மற்றொரு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா ஆற்றில், ஆட்களை ஏற்றிகொண்டு மார்னிங் பேர்டு என்ற படகு முன்ஷிகஞ்ச் என்ற பகுதியில் இருந்து டாக்கா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோயூர்-2 என்ற மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது.
தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கவிழ்ந்த படகில் 100 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும், விபத்து நடந்தபோது 50 பேர் பயணம் செய்ததாத உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 19 பேர் ஆண்களும், 8 பேர் பெண்களும், 3 பேர் சிறுவர்களும் ஆவார்கள்.
டாக்காவில் இருந்து பெரும்பாலான இடத்திற்கு மக்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றன. பல்வேறு வழித்தடங்களில் படகு போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இதனால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.