கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் தப்பிக்க நடிகை தேவயானி யோசனை சொல்லி இருக்கிறார்.
கொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.
கட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்துள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அது உயிர்கவசம். கபசூர குடிநீர் குடியுங்கள். சமூக விலகல் வேண்டும். கைகுலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள். இதைத்தான் பாடல் மூலம் விழிப்பணர்வு படத்தில் சொல்லி இருக்கிறேன்.
வயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். கொரோனா எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்து உள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் விரைவில் ஒழிய ஆண்டவனை வேண்டுகிறேன். ஊரடங்குக்கு பிறகு மீண்டும் சினிமா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்“ இவ்வாறு தேவயானி கூறினார்.