ஐம்பது ஆண்டுகள் தாமதமாக அஞ்சல் அட்டை ஒன்றை டெலிவரி செய்த சம்பவத்துக்கு அவுஸ்ரேலிய தபால் துறை மன்னிப்பு கோரியுள்ளது.
தெற்கு பசிபிக் தீவில் உள்ள டஹிடியில் இருந்து தெற்குஅவுஸ்ரேலியா வில் அடிலெய்டில் என்னும் இடத்திற்குக் கடந்த 1966-ல் அஞ்சல் அட்டை ஒன்று அனுப்பப்பட்டது. இந்த அஞ்சல் அட்டையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் ஆஸ்திரேலியா தபால் துறை உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளது.
அடிலெய்டில் உள்ள தபால் பெட்டி ஒன்றில் இந்த அஞ்சல் அட்டையைக் கண்ட டிம் டஃபி என்பவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிதம் கிறிஸ் என்பவரிடம் இருந்து ராபர்ட் ஜியோர்ஜியோ என்பவருக்கு 1966 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகிறது எனவும் அவர் கூறினார். மேலும், அந்த கடிதத்தில் கிறிஸ் ஈரப்பதமான வானிலையை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார். 1950ஆம் ஆண்டுகளில் அஞ்சல் அட்டைகளில் பிரபலமான பிளாக் டொனால்ட் கட்டிடம், ப்யாபீட் நதிக்கரை போன்ற புகைப்படங்கள் அந்த அஞ்சல் அட்டையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய தபால் துறையின் செய்திதொடர்பாளர் கூறுகையில், சரியான நேரத்தில் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் விநியோகம் செய்யும் பெருமை பெற்றது அவுஸ்ரேலிய தபால் துறை என்றும், இது போன்ற தவறு நடப்பது மிக அரிதான நிகழ்வே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவுஸ்ரேலிய தபால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.