கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ஒத்துழைப்பு இல்லையென ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து இரண்டாம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என கூறிய குட்டரெஸ், சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மார்ச் 23ம் தேதி அனைத்து சண்டை சச்சரவுகளை விடுத்து கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 லட்சத்து 53 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது. 4.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ஏ.எஃப்.பி நிறுவனத்துக்கு ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தற்போது செய்ய வேண்டியது, தனித்து செயல்படுவதன் மூலம் அவர்கள் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் மற்றும் உலக ஒருங்கிணைப்பு முக்கியமானது என்பதை நாடுகளுக்கு புரிய வைப்பதாகும். சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா தொற்று, ஐரோப்பியா நாடுகளுக்கும், அடுத்து வட அமெரிக்க மற்றும் தற்போது தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தற்போது சிலர் இரண்டாவது அலை எப்போது வேண்டுமானாலும் வருமென பேசி கொண்டிருக்கின்றனர். இது கொரோனா தொற்று தொடர்பாக நாடுகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாமையே காட்டுகிறது.
நாடுகளுக்கு ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து புரிதலை ஏற்படுத்தி, திறன்களை ஒருங்கிணைப்பது அவசியம். கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி, சிகிச்சை, பரிசோதனை முறைகள், தடுப்பூசி உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்க செய்வதன் மூலம் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள், வன்முறை அதிகரித்தல் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றிற்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஒருங்கிணைப்பதும், தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க உதவும்.
கொரோனா தடுப்பூசி ஒரு மக்களின் தடுப்பூசியாக இருக்க வேண்டும். ஆனால் நாடுகளிடையே வணிக ரீதியான தகராறில் பணக்காரர்களை உருவாக்கும் தடுப்பூசியாக இருக்க கூடாது. தற்போதைய நேரத்தில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாததால் விரக்தியடைகிறேன்.ஆனால் புதிய தலைமுறையினர் எதிர்காலத்தில் விஷயங்களை மாற்ற முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.