ஒரு மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா இரண்டாம் பரவல் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸால் 7,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,915 பேர் குணமடைந்துள்ளனர். 102 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.