பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை சிறிலங்கா  உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு,எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,உட்படஐந்து அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன

தரிசா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

சுவிஸ்தூதரக பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பான போலி குற்றச்சாட்டுகள் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் விசாரணைகளில் சிஐடியினர் தரிசா பஸ்டியனை தொடர்ந்து இலக்குவைக்கின்றனர் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் டிசம்பர் 2019 முதல் சிஐடியினர் தரிசா பஸ்டியனையும் வேறு பலரையும் சுவிஸ் தூதரக பணியாளரின் போலியான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் தரிசா பஸ்டியனை தொடர்புபடுத்த முயன்றுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் சதி முயற்சி இடம்பெற்றதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ளன.

அரசாங்க ஊடகங்கள் தரிசாபஸ்டியனிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக திட்டமிட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன சமூக ஊடகங்களில் அவரை துரோகி மற்றும் குற்றவாளி என முத்திரை குத்தும் பிரச்சாரங்களும் இடம்பெறுகின்றன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தரிசா பஸ்டியன் அரசாங்கத்தின் சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியராக பணியாற்றியவர் , நியுயோர்க் டைம்சிற்கும் பங்களி;ப்பு செய்பவர் ,மனித உரிமைகள்,இராணுவமயமாக்கல்,ஊழல் மதசுதந்திரம் ஜனநாயகம் அரசியல் உரிமைகள் போன்ற இலங்கையுடன் தொடர்புபற்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் அவரது எழுத்துக்கள் தொடர்ச்சியான ஆட்சியாளர்களினால் இலக்குவைக்கப்படும் மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன,குறிப்பாக இன மத சிறுபான்மையினத்தவர்களின் நெருக்கடிகளை வெளிக்கொண்டுவந்துள்ளனஎன தெரிவித்துள்ளன.

தரிசா பஸ்டியனின் பத்திரிகை பணி காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் இலக்குவைக்கப்படுவது இது முதல்தடவையல்ல என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள் அவர் இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலிற்கான போராட்டம் குறித்து எழுதியுள்ளார் என தெரிவித்துள்ளன.