முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் முகதடுப்புகள், முககவசங்கள் தயாரிப்பு

அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அந்த பல்கலைக்கழகங்கள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பயன்படுத்தப்படும் முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் அமீரக பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

முப்பரிமாண பிரதியெடுத்தலின் அடிப்படை நுட்பமானது ஒரு குறிப்பிட்ட ‘ரெஸின்’ போன்ற திரவத்தின்மீது வெவ்வேறு விதமான அலைவரிசைகளில் லேசர் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும்போது அந்த திரவம், திட வடிவத்தை அடைந்துவிடும்.

ஒரு கணினியில் முககவசம் அல்லது முகதடுப்புகளின் வரைபடம் முப்பரிமாண வடிவத்தில் இருக்கும். அந்த கணினியில் பிரத்யேக 3டி பிரிண்டிங் எந்்திரமும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரம் இயங்கும்போது, கணினியில் உள்ள முப்பரிமாண வரைபடத்துக்கு ஏற்ப பிளாஸ்டிக் மற்றும் ரெசின் கலந்துள்ள கலவையை கொண்டு அந்த கருவி முககவசம் அல்லது முகதடுப்புகளை தாமாகவே வடிவமைத்துக்கொள்கிறது.

இந்த தொழில்நுட்பத்தில் அபுதாபியில் உள்ள அல் அய்ன் அமீரக பல்கலைக்கழகம், அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த முகதடுப்பு மற்றும் முககவசங்களை உருவாக்கியுள்ளன. இந்த முககவசமானது என் 95 முககவசத்தை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது தினமும் 500 முககவசங்களை தயாரிக்க முடிகிறது. என் 95 போன்றுள்ள உறுதியான முககவசத்தை 22 திர்ஹாமுக்கு விற்பனைக்கு அளிக்க முடியும். அதேபோல முகதடுப்புகளை 15 திர்ஹாமுக்கு விற்பனை செய்ய முடியும். இவைகளை ரசாயன பொருட்களை கொண்டு சுத்தப்படுத்தினாலும் இதன் தன்மை மாறுவதில்லை. கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.