ஆலயங்களின் புனிதத்துவத்தை கேள்விக்குறியாக்காத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவின் போது, பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினர் ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நடமாடித்திரிந்தமை சைவ மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழா கடந்த இருபதாம் திகதி இடம்பெற்றது. இலங்கையில் நாகர் ஆட்சியுடன் வரலாற்றுத் தொடர்புடைய புனித ஆலயம் நாகபூசணி அம்மன் ஆலயம்.
இக்கோவிலின் கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் சுகாதாரத் துறையினால் விதிக்கப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவசியமானது. அதைக் காரணமாக்கிக் கொண்டு இராணுவத்தரப்பினரும், காவல் துறை தரப்பினரும் ஆலயத்தின் புனிதப்பகுதியான ஆதிமூலம் வரையான பகுதிகளுக்குள் சப்பாத்து சீருடையணிந்து அத்துமீறிச் சென்று புனிதத்துக்கு கேடுவிளைவித்தார்கள் என்ற செய்தி சைவமக்களை, பக்தர்களை மனவேதனைப்படுத்தியுள்ளது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இச்செய்கைகளை உறுதிப்படுத்தி, நேற்றும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒரு செய்தியை அனுப்பியிருந்தேன். வடமாகாண ஆளுநரிடமும் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன்.
இன்று காலை அரச அதிபரிடமும் பேசி நாகபூசணி அம்மன் ஆலய வளாகத்தின் புனிதத்தைக் காப்பாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் “பாஸ்’ நடைமுறையை நீக்கி பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறுன்றி அனுமதிக்குமாறும் கோரியிருக்கின்றேன்.