இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து செயற்படும் e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள இவ்வாறான பாடசாலைகளுக்கு Zoom செயலி மூலமும் மற்றும் இணைய வழிகளின் மூலமும் கற்பிக்கும் திட்டமொன்றையே e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) ஆரம்பித்துள்ளது.
முக்கியமாக, ஆசிரியர்கள் தட்டுப்பாடான உயர்தர பாடங்களான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகியவற்றுக்கும், வகுப்பு 6-11 வரையான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கும் இணைய வழி கற்பித்தல் ஏற்கனவே பரீட்சார்த்தமாக நடைபெற்று வருகின்றது.
இக்கற்பித்தல் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளின் வகுப்பறைகளில் கல்வியமைச்சினதும் அதிபர்களினதும் ஆதரவில் தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. இணைய வசதி பெற்றுக்கொள்ள முடியாத பாடசாலைகளுக்கு off-line வீடியோ பாடங்களின் ஊடாக கற்பித்தல் நடைபெறும். பல பாடசாலைகளில் மல்டிமீடியா உபகரணங்கள் இல்லாததால் அவற்றையும் வழங்குதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இணைய விருப்பமானவர்கள் கீழே காணப்படும் Google form ஐ நிரப்பி அனுப்பிவைப்பதன் மூலம் இதில் இணைந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளிலிருந்தும் இந்த திட்டத்தில் பங்குபற்றலாம் எனவும், இதற்காக உங்களுக்கு தேவையான பாடத்திட்டம், பாடப்புத்தகம். வினாத்தாள்கள் யாவும் பெற்றுத்தரப்படும். உள்நாட்டில் இருந்து பங்குபற்றுபவர்களுக்கு தேவையான செலவுகள் வழங்கப்படும் இது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துவரும் e-கல்வி அறக்கட்டளை அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
உங்களுக்கு தெரிந்தவர்ளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் இந்த online teacher contact form ஐ அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளார்கள்.