பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதால் 5 மாதங்களுக்குப் பிறகு சானியா மிர்சா, குழந்தையை சந்திக்க சோயிப் மாலிக் இந்தியா செல்கிறார்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.
கொரோனா ஊரடங்கு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டபோது சோயிப் மாலிக் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இருந்தார். அவரது மனைவி சானியாவும், குழந்தையும் ஐதராபாத்தில் உள்ளனர். விசா அனுமதியின்மை, விமானப் போக்குவரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க முடியாமல் சோயிப் மாலிக் தவித்தார்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினரை சந்திப்பதற்காக சோயிப் மாலிக் இந்தியா வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார்.
29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28- ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சோயிப் மாலிக் மட்டும் இந்தியா வந்து விட்டு இங்கிருந்து ஜூலை 24-ந்தேதி இங்கிலாந்து சென்று அணியுடன் இணைந்து கொள்வார்.
குடும்பத்தினரை சந்திப்பதற்காக தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு அனுமதித்தது.
இதேபோல சோயிப் மாலிக் தாமதமாக இங்கிலாந்து வருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும ஒப்புக்கொண்டுள்ளது. ஆல்-ரவுண்டரான அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.