ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் Kangaroo Point ஹோட்டலில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சி கவுன்சிலர் Jonathan Sri கைது செய்யப்பட்டுள்ளார்.
குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தன்னை கைது செய்ததில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், என்மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என Jonathan Sri குறிப்பிட்டுள்ளார்.
“நிலைமையை தணிக்க முயலாமல் படைப்பலத்தை மேலும் நிலைமை மோசமடையும் விதத்தில் காவல்துறையினர் பயன்படுத்தினர்,” என அவர் கூறியுள்ளார்.
கங்காரு பாய்ண்ட் ஹோட்டல் அருகே முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
“பல நாட்களாக முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், அதைக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைவதைத் தடுக்கிறார்கள்,” எனக் குற்றம் சாட்டியுள்ளார் காவல்துறை ஆய்வாளர் டோனி ரிட்ஜ். “பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்னில் உள்ள மாற்று தடுப்பு இடங்களுக்கு (ஹோட்டல்கள்) அழைத்துவரப்பட்டுள்ளவர்கள் (அகதிகள்) மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு தற்காலிகமாக அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் முழுமையான மருத்துவ சிகிச்சை பெற ஊக்கவிக்கப்படுகிறார்கள். அதன் மூலம் அமெரிக்காவில் மீள்குடியேறலாம், அல்லது நவுரு அல்லது பப்பு நியூ கினியா அல்லது சொந்த நாட்டிற்கு திரும்பலாம்,” எனத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய எல்லைப்படையின் ஆணையர் மைக்கேல் அவுட்ரம் தெரிவித்துள்ளார்.
அதே போல், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.