கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவது குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோத்தாபய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் மூவாயிரம் இராணுவத்தை கொன்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று கருணா கூறியமை தொடர்பில் எழுப்பப்பட் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கருணா உண்மையைதான் சொல்லியுள்ளார். அவர் கொரோனாவை விட கொடூரமானவர்தான். 2004 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்தத்தில், தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்ததில் மிக கொடூரமாக செயற்பட்டவர் என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை
மஹிந்த ராஜபக்ச அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் திராணியில், தான் பெரிய வீரன் போன்று 3000 இராணுவத்தை கொன்றதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
உண்மையில் எந்தவி ஆதாரங்களும் இல்லாமல் பல அரசியல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு கைதிகள் தண்டை பெற்றிருக்கின்றார்கள்.
பல அரசியல் கைதிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எவ்வாறு பெறப்படுகின்றது என்றால் பொலிஸ் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு வாக்குமூலத்தை எழுதி, அரசியல் கைதிகளிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்குவார்கள்.
அதில் என்ன எழுதி உள்ளது என்பது கூட தெரியாமல், பயத்தினால் அரசியல் கைதிகள் கையெழுத்திடுவார்கள். அவர்கள் கையெழுத்திட்ட வாக்குமூலத்தை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக மன்றில் சமர்ப்பித்து அவர்களுக்கு எதிரான வழக்கு நடாத்தப்படும்.
அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் கருணா அம்மான் உண்மையிலேயே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தெரிவித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் மீதான வழக்குகளிலும், அவர்கள் அங்கு குண்டுவைத்தார்கள், இங்கே இராணுவத்தை கொலை செய்தார்கள், கிளைமோர் வைத்தார்கள் என்றுதான் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றது.
கருணா அம்மான் மிக தெளிவாக சொல்லியுள்ளார் தான் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக. ஏன் அவர் மீது மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்து. கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal