இலங்கையில் மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது என ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசாங்கத்தின் உத்தரவுகளிற்கு அப்பால் இது சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் இந்த கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2019 இல் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
தனது விஜயத்தின் போது இலங்கையின் சிவில் சமூகத்தினரிடமிருந்து கிடைத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் தன்னை பெரும் கரிசனை கொள்ளச்செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விடயங்கள் குறித்து செயற்படும் அமைப்புகள் பல்வேறு விதமான கண்காணிப்பிற்கு உள்ளாகும் அதேவேளை அதேவேளை அனைத்து அமைப்புகளும் கண்காணிப்பிற்கு உட்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொலைபேசி அழைப்புகள் கண்காணி;க்கப்படுகின்றன,வீடுகளிற்கும் அலுவலகங்களிற்கும் செல்கின்றனர்,புலனாய்வு அமைப்பினர் படங்களை எடுத்து கண்காணிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களின் போது அந்த பகுதிகளில் படையினரும் புலனாய்வு தரப்பினரும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்கள் கேள்விகேட்கப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவினரும் அரசசார்பற்ற அமைப்புகளின் அலுவலகங்களிற்கு தொடர்ச்சியாக செல்வது குறித்த தகவல் கிடைத்ததாகவும்,உறுப்பினர்களை கேள்விக்குட்படுத்திவதுடன் அச்சுறுத்தும் சூழலை அவர்கள் ஏற்படுத்துகின்றனர் எனவும் ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசசார்பற்ற அமைப்பின் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களி;ல சிஐடியினர் ஆறு தடவை சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளிற்கு தாங்கள் செல்லும்போது படையினர் தங்களை பின்தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளிற்கு தாங்கள் செல்வதில்லை என அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமொன்றை நடத்தும் முன்னர் அரசசார்பற்ற அமைப்பின் உறுப்பினர்களும் அதில் கலந்துகொள்பவர்களும் குறிப்பிட்ட நிகழ்வு குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அறிவிக்கவேண்டும் என்பது குறித்து தான் கவலையடைந்துள்ளதாக விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
நான் இலங்கையில் கலந்துகொண்ட ஒரு சந்திப்பின் போது அந்த கூட்டத்தில் சாதாரண உடையில் புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது என குறிப்பிட்டுள்ள விசேட அறிக்கையாளர் அவர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்காணிப்பு என்பது தெளிவாக அச்சத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது என குறிப்பிட்டுள்ள அவர் சிவில் சமூகத்தினரும் மனித உரிமை ஆர்வலர்களும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பொறிமுறையுடன் தொடர்பை பேணுவதற்காக அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகவும் கருதலாம் என தெரிவித்துள்ளார்.