ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுவதை கடைப்பிடிக்குமுகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன
இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்களை அடங்கிய வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும்,ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளின் முழுமையான அளவினை இந்த வரைபடம் வெளிப்படுத்தவில்லை என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
ஜேவிபியின் முதலாவது இரண்டாவது கிளர்ச்சியின் போது காவல் துறை நிலையங்கள் சித்திரவதைக்காக பயன்படுத்தப்பட்டன எனினும் பல காவல் துறை நிலையங்கள் என்பதால் அவற்றை இந்த வரைபடத்தில் சேர்க்கவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் தெரிவித்துள்ளன.
2006 முதல் 2019 வரை சித்திரவதைக்காக பயன்படுத்தப்பட்ட இடங்களை ஐடிஜேபியின் சாட்சியங்களை சேகரிப்பதற்கான திட்டத்தின் மூலம் பெற்றதாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
எண்பதுகளின் இறுதியில் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டபீடமும், லேக்ஹவுசின் கட்டிடமொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன,கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் பல பாடசாலைகளும், கல்லூரிகளும்,பயிற்சி நிறுவகங்களும் தொழிற்சாலைகளும் பண்ணைகளும், சினிமா அரங்குகளும், கோல்வ் திடல்களும் சித்திரவதைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
1987 முதல் 89 வரை சிங்கள இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை செய்வதற்கு இராணுவம் பயன்படுத்திய கட்டிடங்கள் நினைவிலிருந்து அகற்றப்பட்டுள்ளன என ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர் அமைப்பின் ரோகித பாசான தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் கூட்டு தார்மீக மனச்சாட்சி என்பது மக்கள் வாழும் விதத்தினால் உருவாக்கப்படுவதில்லை, உயிரிழந்த மக்கள் அவர்கள் எவ்வாறு நினைவுகூறப்படுகின்றார்கள் என்பதாலேயே அது தீர்மானிக்ப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களை சமூகம் நினைவுகூறாதபோது அது ஆபத்தான மறுப்பினை கைக்கொள்கின்றது,இதன் காரணமாக ஆபத்து மீண்டும் ஏற்படும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.