ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல் திணைக்களத்தின் அனுமதியுடனே அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரை தலையிடச் செய்வது என்பது பெரும் அச்சுறுத்தல் மாத்திரமின்றி அடக்குமுறை முயற்சி எனவும் எச்சரித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஊடகவியலாளர்களுக்காக தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டையை பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்படுத்தலுக்கு பின்னர் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தொலைக்காட்சி , அலைவரிசை , பத்திரிக்கை , இணையத்தளம் மற்றும் பிரதேசவாரியாக செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதுவரையும் தகவல் திணைக்களித்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை , பாதுகாப்பு அமைச்சின் ஊடாக வழங்க எடுத்திருக்கும் தீர்மானமானது ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே அமையப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இணையத்தளம் மற்றும் பிரதேசவாரியிலான ஊடகவியலாளர்களுக்கு பாரிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை அந்த தீர்மனத்தினால் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதில் காலத்தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த தீர்மானம் ஊடகச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இதுவரை காலமும் செயற்படுத்தப்பட்டுவந்த விதிமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலமும் ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதைப் போன்று தொடர்ந்தும் அவ்வாறே வழங்கப்பட வேண்டும். நாட்டில் ஊடக அமைச்சு ஒன்று செயற்பாட்டில் இருக்கின்ற போதிலும் , இந்த அடையாள அட்டை விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சை இணைத்துள்ளமை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். நாட்டின் எந்தவொரு செயற்பாடுகளிலும் பாதுகாப்பு அமைச்சியையும் , இராணுவத்தினரையும் தலையிடச் செய்வதானது எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுவதுடன் , அது ஒரு அடக்குமுறை செயற்பாடாகும்.