‘சினிமா வீரன்’ ஆவணப் படத்தை 3 பாகங்களாக உருவாக்க ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
‘சினிமா வீரன்’ என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்துக்கான வர்ணனையைக் (வாய்ஸ் ஓவர்) கொடுத்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.
முழுக்க சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் இதுவாகும். “சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்” என்று இப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ‘சினிமா வீரன்’ ஆவணப் படத்தை 3 பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். முதல் பாகம் சண்டைப் பயிற்சியாளர்கள், இரண்டாவது பாகம் துணை நடிகர்கள், மூன்றாவது பாகம் பின்னணி நடனக் கலைஞர்கள் என திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, சண்டைப் பயிற்சியாளர்களையும் தேசிய விருதுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal