ஒன்றுபட்டுப் போராடினால் எதையும் மாற்ற முடியும்! கனடாவில் தமிழ் மக்கள் ……

மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை நிரூபித்துள்ளனர்

253 பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டு 155,000 க்கும் மேற்பட்ட (தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ) மாணவர்களைக் கொண்ட கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்திய பாடசாலைக் கல்விச் சபை, இவ்வாண்டு மே 18, 2020இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் “இன்று தமிழர் இனப்படுகொலை நினைவு நாள்” என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்து வெளியிட்ட கீச்சக செய்திக்கு தமிழ்மக்கள் நன்றியையும் சிறிலங்கா அரச ஆதரவுச் சிங்களதரப்பினரிடமிருந்து பலத்த எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக யூன் 4, 2020 இல் மற்றுமொரு கீச்சக செய்தியாக இந்த கல்விச் சபையிடமிருந்து திடீரென “இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலில் உயிரிழந்த மக்கள் அனைவரையும் நினைவு கூருகிறோம்” என்று மாற்றி இனப்படுகொலை என்பதைத் தவிர்த்து நினைவேந்தல்ச் செய்தி மீண்டும் வெளியிடப்பட்டது.

தமிழ் இனப்படுகொலை என்ற சொல் அகற்றப்பட்ட போது தமிழினம் துடி துடித்தது!

இதற்கு எதிராகக் கனடியத் தமிழர் தேசிய அவை, Brampton மற்றும் Mississauga தமிழ் ஒன்றியம், CTYA, தமிழ் இளையோர் அமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கரி ஆனந்தசங்கரி, ON சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம், Brampton மாநகர முதல்வர் திரு. பற்றிக் பிரவுன், திரு.நீதன் சான் உட்பட அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதி அமைப்புகள், நிறுவனங்கள் கொடுத்த அழுத்தம் மற்றும் 500க்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைச் சபைக்கு எழுதிய மின்னஞ்சல்கள், கடிதங்கள் மூலம் தமிழினம் தமக்குள் பிரிவினைகள் மறந்து ஒன்று சேர்ந்து கண்டனங்கள் கவலைகளைத் தெரிவித்ததால் முதலில் தாம் தெரிவித்த கருத்துக்களை தாம் மீளவும் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டு அறிக்கைகளை மாற்றி இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஏற்றுக்கொள்ளும் வகையில் மீளத் திருத்தி வெளியிட்டுள்ளன.

தமிழின அழிப்பு சார்ந்த கருத்துக்களை இனவெறி இலங்கை அரசின் எதிர்ப்பால் மீளபெற்றுக்கொண்ட @peelschool நிர்வாகம் தமிழ் இளையோர்கள் மேற்கொண்ட ஆதாரபூர்வமான, நீதிவழி போராட்டத்தினால் தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரியும் தமிழ் இன அழிப்பு சார்ந்த விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்து 17.06.2020 வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதம் – Www.peelschools.org

ஒரு சமூகமாக நாம் ஒருமித்த குறிக்கோளோடு ஒருமுகமாகச் செயற்பட்டுப் பெற்ற இந்த வெற்றி ஒன்றுபட்ட மக்களே மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிகளை குவிப்பர் என்பதை நிரூபிக்கின்றது!

தமிழர் நாம் ஒன்றுபட்டால் தரணி எங்கள் வசமாகும்!

பாராட்டுக்கள் அனைவருக்கும் பீல் கல்விச் சபையினருக்கும்!