இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு:
கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடிய இனவழிப்பின் நினைவு நாள் தொடர்பான எனது உரை தொடர்பாக கடுமையான மிகவும் அதிர்ச்சியாக இருக்ககூடிய செய்தி என்னவென்றால், இந்த கொடுமையான அச்சுறுத்தல்கள் அனைத்தும் தற்போதைய கோத்தபாய அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது என்பதுதான்.
நான் மட்டுமல்ல சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதையொத்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது?
சிறிலங்கா சுதந்திரமடைந்த நாளிலிருந்து, எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழர்களை ஒடுக்கும் நோக்குடன் உடல்ரீதியாக பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக பாதிப்புக்களை ஏற்படுத்தினார்கள். தமிழர்களுக்கு எதிரான சட்டவாக்கங்களை மேற்கொண்டு, சிறிலங்கா அரசும் சிறிலங்கா அரச படைகளும் இணைந்து தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
தமிழ் மக்களின் 1950 களில் 1960 களில் 1970 களில் நடைபெற்ற சமாதான வழிமுறையான எதிர்ப்பு ஊர்வலங்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டார்கள். அதன் உச்சமாக 1983 இல் கறுப்பு ஜுலை பெரும் இனவழிப்பு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் அங்கு உள்நாட்டுப்போர் நிலைமை ஏற்பட்டது. இந்தப்போரில் சிறிலங்கா அரசபடைகளால், கொலைகள் பாலியல் வன்புணர்வுகள் கடத்தப்படுதல் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளல் என சிறுவர்கள் பெண்கள் என அப்பாவி தமிழ் மக்கள் மீது அழிவை மேற்கொண்டார்கள்.
இதன் விளைவாக 150000 தொடக்கம் 200000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் குறைந்தது 70000 வரையான தமிழர்கள் மார்ச் 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஏறத்தாழ 300000 தமிழர்களை பாதுகாப்பு வலயங்களுக்குள் செல்லுமாறு அறிவித்துவிட்டு அங்கு எறிகணைகளை ஏவித்தாக்குதல் செய்திருக்கின்றார்கள்.
மார்ச் 2011 இல் நம்பத்தகுந்த குற்றசாட்டுகள் அடிப்படையில் போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களும் நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்த பொறிமுறைகளில் இதுபற்றிய நீதிப்பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் அதனை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கிவிட்டது.
இந்த நிலையில் தான் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக 137000 பேர் கையெழுத்திட்டு ஆதரவை தெரிவித்தற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தமிழ்ச்சமூகத்தின் இனவழிப்பு நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக அவர்களுடன் நானும் இணைந்து நிற்கின்றேன்.
இந்த இனவழிப்பை செய்தவர்களுக்கு சொல்கின்றேன். நீதி உங்களை தேடி வந்துகொண்டிருக்கின்றது. நீங்கள் ஒருபோதும் அதிலிருந்து தப்பமுடியாது.
என அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.