பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும்.
தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்து, அந்நியர் ஆட்சிக் காலத்தில் கூட, பாதுகாக்கப்பட்ட இந்(து)த கோவில், சகோதார இனத்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் ஆட்சியில், அழி(ஆக்கிரமி)க்கப்பட்டு உள்ளது. இவையே, இந்த இரண்டு செய்திகளின் பொதுவானதும் எளிமையானதுமான சாராம்சம் ஆகும்.
பார்வைக் கோணம் என்பது சரியாக இருப்பின், சிறிய பிரச்சினையோ அன்றிப் பெரிய பிரச்சினையோ எதுவாகினும் தீர்த்துக் கொள்ளலாம். மாற்றுவழி என்பது, வெறுமனே நடப்பதிலும் பயணிப்பதிலும் அல்ல; மாறாக, வித்தியாசமாகவும் தூரநோக்கத்துடனும் சிந்திப்பதில் இருக்கின்றது.
ஆனாலும், ஆழிப் பேரலை (2004) அனர்த்தத்துக்குப் பின்னரும், கொடிய ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரும் (2009), இன்னமும் முடிவுக்கு வராத கொவிட்-19 தொற்றின் அழிவுக்குப் பின்னரும் கூட, பெரும்பான்மை இனத்தினது பார்வைக் கோணமும் மாறவில்லை; மாற்றாகச் சிந்திக்கவும் தயாராக இல்லை என்பது போலவே, நடப்பு நிலைவரங்கள் உள்ளன.
அவ்வாறாயின், அவர்களது பார்வைக் கோணம் எப்போது மாறும், மாற்றாக எப்போது சிந்திக்கப் போகின்றார்கள்? பெரும்பான்மை இன மக்களது, சிறுபான்மை மக்களை நோக்கிய அறியாமை, புரியாமை, உணராமை, தெரியாமை என்பன, நம்நாட்டை உயராமை எனும் நிலைக்கு இட்டுச் சென்றது; இட்டுச் செல்கின்றது. இதனால், தொடர்ந்தும் ஏமாற்றத்தைத் தருகின்ற எதிர்பார்ப்புகளுடன் தமிழினம் (உயிர்) வாழ்கின்றது.
செவிமடுத்தல், கருத்துகளைக் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்டல் என்பவை, முக்கியமான ஓர் அம்சமாகும். ஆனால், 70 ஆண்டுகள் கடந்தும், தமிழ் இனத்தினது நியாயமான தேவைகள், விருப்பங்கள், அபிலாசைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
இதற்கு எடுத்துக்காட்டுகளாக ஒன்றல்ல இரண்டல்ல; பலவற்றைத் தொடராக அடுக்கலாம். கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி, அண்மையில் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால், இன்று கிழக்கு மாகாணத்தின் மொத்தச் சனத்தொகையில் சிங்கள மக்கள் மூன்றில் ஒன்று என்ற நிலையை எட்டிவிட்டார்கள்.
இவ்வாறான போதிலும், மீதியாக மூன்றில் இரண்டு பங்காகவுள்ள சிறுபான்மை இனத்தவர்கள், முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ஆகவே, செயலணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. அனைத்து மக்களினது பங்கேற்புடனான வேலைத்திட்டங்களே, வெற்றி அடைந்த திட்டங்களாக உள்ளன.
ஓவ்வொரு தனிநபர்கள் தொடக்கம், ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்புகள் வரை, ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் வினைதிறன் மிக்க ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு, இந்தியாவில் மூடப்படுகின்ற நிலையிலிருந்த பற்பசை நிறுவனத்தை, முன்னிலைக்குக் கொண்டு வந்த ஒரு கதையைப் பார்க்கலாம்.
குறித்த நிறுவனம், நீண்ட காலமாகப் பற்பசைகளை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி வருவதுடன் இலாபகரமாகவும் இயங்கி வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் போட்டியாளர்களின் ஆதிக்கம், மூலப் பொருள்களின் விலை ஏற்றம், ஏனைய காரணங்களால் அதனது விற்பனை மந்தமாகியது.
விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டாலும், பெரிய மாற்றங்களைக் காண முடியவில்லை. இந்நிலையில், முகாமைத்துவம் விற்பனையை அதிகரிக்க, பல வழிகளிலும் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.
இவ்வாறான நிலையில், அந்த நிறுவனத்தினது உரிமையாளர், காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். சில நாள்களாகத் தனது முதலாளி ஏதோ பிரச்சினையுடன் உள்ளதை, அவரது கார்ச் சாரதி அவதானித்திருந்தார். ”உங்கள் பிரச்சினை என்னவென்று, நான் அறிந்த கொள்ளலாமா” எனச் சாரதி கேட்டார்.
இவர், அப்படி என்ன ஆலோசனை சொல்லப் போகின்றார் என்ற எண்ணத்துடன், உரிமையாளர் தனது பிரச்சினையைச் சொன்னார். ”விற்பனையை அதிகரிக்க, நான் ஒரு வழி சொல்லட்டுமா” எனக் கேட்டார் சாரதி. உரிமையாளரும் ”ஆம்” என அனுமதித்தார்.
”பற்பசையின் வாயின் விட்டத்தைச் சற்று அதிகரித்தால், ஒவ்வொரு தடவையும் பயன்படுத்துகின்ற போது, அதனால் வெளியே வருகின்ற பற்பசையின் அளவு அதிகரிக்கும். இதனால், குறித்த பற்பசை விரைவாக முடியும்” என்றார். அவரின் ஆலோசனை பின்பற்றப்பட்டது; வெற்றி அளித்தது.
வீழ்ந்து விடுகின்ற நிலையிலிருந்த பற்பசை நிறுவனத்தை, சாரதி ஒருவரது ஆலோசனை தூக்கி நிறுத்தி இருக்கின்றது. இந்நிலையில், இனப்பிணக்கு காரணமாக வீழ்ந்து கிடக்கின்ற தாய் நாட்டை மீட்டு, முன்னிலைக்குக் கொணடு வர, சிறுபான்மை இனங்களது கருத்துகளை எப்போதாவது செவிமடுத்தார்களா, இனியாவது செவிமடுப்பார்களா?
ஒரு விடயத்தைச் சரியாகச் செய்து ஏற்படுகின்ற அனுபவத்தைக் காட்டிலும், பிழையாகச் செய்து ஏற்படுகின்ற அனுபவம் அலாதியானது; மறக்க முடியாதது. ஆனால், சுதந்திரத்துக்குப் (1948) பின்னரான 70 ஆண்டுகள், மாறிமாறி ஆண்ட அரசாங்கங்கள் வறுமைக்கு எதிராகப் போராடியதைக் காட்டிலும், தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகவே, தமது உச்ச சக்தியைச் செலவழித்தன.
இரண்டு சிங்களவர்கள் சந்தித்தால், தங்களது சுகதுக்கங்களைக் கதைப்பார்கள்; பொருளாதாரப் பிரச்சினைகளைக் கதைப்பார்கள். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கா, யானைக் கட்சிக்கா, தொலைபேசிக்கா கூடுதல் ஆசனங்கள் வரும் எனக் கதைப்பார்கள்.
அதேவேளை, இரண்டு தமிழர்கள் சந்தித்தால், தங்களது தனிப்பட்ட சுகதுக்கங்களைக் கதைப்பதைக் காட்டிலும், தங்களது இனத்தினது இருப்பு, நிலத்தினது பாதுகாப்பு, தங்களது சந்ததியின் வளமான எதிர்காலம் என்பவற்றையே கதைப்பார்கள்.
அதாவது, ஒரு நாட்டின், ஒரு தேசிய இனம், தனது பொருளாதார சமூக நலன் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற வேளை, பிறிதொரு தேசிய இனம், தனது இருப்புத் தொடர்பில் கவலையுடன் வாழ்கின்றது.
ஆகவே, இலங்கையில் தமிழினம், தனது தொடர்ச்சியான இருப்புத் தொடர்பில் அச்சத்துடன் வாழ்கின்றது. கடந்த 70 ஆண்டு காலமாகப் பல அரசாங்கங்கள், பல அரசமைப்புகள் வந்து விட்டன. ஆனால், இவை எவையுமே ஒரு தேசிய இனத்தினது (தமிழினம்) இருப்பை உறுதி செய்பவையாக இல்லை.
தமிழ் மக்களது எதிர்பார்ப்பு என்ற எல்லையை அண்மித்துக் கூட சிங்கள அரசாங்கங்கள் வரவில்லை. சிங்கள மக்கள், அந்த எல்லையை அண்ட அனுமதிக்கவும் இல்லை. இதுவே, காலப்போக்கில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
இன்று, இந்த இடைவெளி இருப்பதாலேயே, பல பிரச்சினைகள் உள் நுழைகின்றன. இதனது அடுத்த கட்ட வளர்ச்சியாகத் தனியாகச் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற நிலை கூட வந்துவிட்டது. இங்கே, தமிழ் மக்களது எண்ணங்களும் கருத்துகளும் சபை ஏறாத நிலை ஏற்பட்டு விட்டது.
இது இவ்வாறிருக்க, அண்மையில் தமிழ்நாட்டு சொற்பொழிவாளரது பேச்சு, வானொலியில் போய்க் கொண்டிருந்தது. ”ஒருவரது தலைக்கு மேலாகக் காகம் செல்வதை அல்லது, தலை மீது காகம் எச்சமிடுவதைத் தடுக்க முடியாது. ஆனால், ஒருவரது தலையில் காகம் கூடு கட்டி வாழ்வதைத் தடுக்க முடியும்; தடுக்கலாம்” எனக் கூறினார்.
அதாவது, ஒருவரது வாழ்வில் கவலைகள் அவ்வப்போது வரும் போகும்; (காகம் தலை மேலாகச் செல்லல் அல்லது தலையில் எச்சமிடுதல்). ஆனால், கவலையோடு வாழ்வது (காகம் தலையில் கூடு கட்டி விடுதல்) என்பது தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
ஆகவே, இவ்வாறான முரண்பாடுகளும் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் ஆதிக்கம் செலுத்துகின்ற இக்காலப் பகுதியில், தங்களது பாதுகாப்பும் நல் வாழ்வும் குறித்து, தமிழ் மக்கள் அதிகம் சிந்திக்கின்றார்கள்; கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், இனப்பிணக்குத் தீரும் வரை, ஈழத் தமிழ் மக்கள் அனைவரது தலைகளிலும் கட்டியிருக்கும் கூடுகள் (நிரத்தரக் கவலைகள்) கலையாது இருக்கலாம்.
ஆனாலும், தமிழினத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலும் சாதிக்கப்பட வேண்டியவைகள் ஆகும். அதாவது, அசாதாரண நம்பிக்கை, அசாத்தியமான உழைப்பு. இவை இரண்டுமே, நாளைய நாளில், தமிழ் மக்களுக்கு விடியலைத் தரப்போகின்றவைகள்.
காரை துர்க்கா