ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் பயணித்த வியாட்நாமியர்கள் !

ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் சென்ற 11 வியாட்நாமியர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் சென்ற 2 இந்தோனேசியர்கள் கிழக்கு திமோரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று குறித்த அச்சம் நிலவுவதால், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு திமோரின் ஜாகோ தீவு அருகே தடுத்து நிறுத்தப்பட்ட 11 வியாட்நாமியர்களில் 8 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவு அருகே படகு பழுதானதால் உதவியை நாடி அத்தீவில் படகை நிறுத்திய நிலையில், திமோர் நாட்டு அதிகாரிகளால் படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பண்ணைகளில் வேலை வாங்கித் தருவதாக ஆட்கடத்தல்காரர்கள் வியாட்நாமியர்களுக்கு உறுதியளித்து அழைத்து வந்துள்ளதாக கிழக்கு திமோர் கொரோனா நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பாளர் Dr Aurelio Guterres தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதிக்கு அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்ததாகக் கூறும் Guterres அதற்காக ஒரு நபருக்கு 22,000 அமெரிக்க டாலர்களை ஆட்கடத்தல்காரர்களிடம் கொடுத்ததாகக் கூறுகிறார்.

இந்த வியாட்நாமியர்கள் ஆட்கடத்தல்காரர்களின் போலியான நம்பிக்கையினால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க முடியாது என எச்சரித்து வருகின்றது. இந்த சூழலில், கடந்த ஜனவரி 2020ல் இவ்வாறு ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற வெளிநாட்டுப் படகு ஒன்று திருப்பி அனுப்பப்பட்டது. அதே போல், 2019ல் நான்கு படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன அல்லது திருப்பி அனுப்பப்பட்டன.

இந்நிலையில், தற்போது கிழக்கு திமோரில் ஆட்கடத்தல் படகு தடுத்து நிறுத்தப்பட்டதை ஆஸ்திரேலியாவை அறிந்திருப்பதாகவும் திமோர் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் நிலவிவரும் தற்போதைய நிலையில் நடந்துள்ள இந்த ஆட்கடத்தல் நிகழ்வை எச்சரிக்கையுடன் அணுகும் கிழக்கு திமோர் அரசு தரப்பு, தனிமைப்படுத்தல் காலத்திற்கு பின்னர் 11 வியாட்நாமியர்களும் 2 இந்தோனேசியர்களும் நாடுகடத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.