நான் சந்தித்ததில் பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். எந்த ஆடுகளம், எந்த நாடு என்றெல்லாம் இவருக்கு கவலை இல்லை. உலகின் எந்த திசையில் களம் இறக்கப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொள்ளக் கூடியவர்.
தொழில்முறை கிரிக்கெட்டிற்கான ஷாட்டுகளை இவர் ஆடவில்லை என்றாலும், பந்தை துல்லியமாக கணித்து விளையாடுவதில் கில்லாடி. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை எளிதில் சாய்த்து விட இயலாது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நீங்கள் சந்திக்க மிகவும் கஷ்டப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் யார்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஸ்மித் ‘‘முகமது அமிர், நான் சந்தித்ததில் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
முகமது அமிர் 2010-ம் ஆண்டு மேட்ச்-பிக்சிங் விவகாரத்தில் ஐந்து ஆண்டுகள் தடைபெற்றார். அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார். 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.