தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் விவேக், இந்த மண்ணை மிதித்தவனை சென்னை கைவிடாது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!” என பதிவிட்டுள்ளார்.