ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தின் புதிய வரவாக சேர்ந்துள்ள ஒரு அரியவகை வெள்ளைப் புலி தமிழில் அளிக்கப்படும் கட்டளைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் தமிழ்மொழி தெரியாத வனவிலங்கு காப்பக பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளைப் புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு புலியை தங்களுக்கு அளிக்குமாறு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலாக இரு ஓநாய்களை அளிக்கவும் அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, ‘ராமா’ என பெயரிடப்பட்டிருந்த அந்த வெள்ளைப் புலி சாலை மார்க்கமாக உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது, அங்கு புதிய வரவாக சேர்ந்துள்ள ராமாவை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் சென்னையில் வளர்ந்த ராமா, இங்குள்ள அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் தமிழில் கூறிய சிலவார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு வளர்ந்ததால், ராஜஸ்தான் மாநில வனவிலங்கு காப்பக பணியாளர்கள் பேசும் மொழி அதற்கு சரியாக புரிவதில்லை.
எனினும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ராமாவை பராமரித்தவர்களிடம் இருந்து கற்றுசென்ற சில வார்த்தைகளை வைத்து அவர்கள் ஒப்பேற்றி வருவதாக தெரியவந்துள்ளது.