ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையே கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
‘Reciprocal Access Agreement’ எனப்படும் அந்த ஒப்பந்தம் ராணுவம் ரீதியாக மட்டுமின்றி குற்ற விவகாரங்கள், குடிவரவுக் கட்டுப்பாடுகள், வரி தொடர்பான விவகாரங்கள், பேரழிவு நிவாரண செயல்பாடுகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான முறையை உருவாக்குவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஜூலை 2014ல் இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தத்தை இறுதிச் செய்வதற்கான பேச்சுவார்தை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இடையே தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஒப்பந்தம் தற்போது இறுதிச்செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையே இதே போன்றதொரு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பது இதுவே முதல் முறையாகும். இது ஆஸ்திரேலியாவுடனான உறவை ஜப்பான் வலுப்படுத்துவதற்கான நகர்வு எனக் கருதப்படுகின்றது.
அதே சமயம், கொரோனா பெருந்தொற்றுக்கு சூழலுக்குப் பின்னர் குடிவரவு கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையே நடந்து வருகின்றது. இந்த சூழலில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் விரைவில் ஜப்பானுக்கு பயணமாகக்கூடும் எனச் சொல்லப்படுகின்றது. இப்பயணம் முழுமைப்பெற்றால், ஜப்பானில் கொரோனா பெருந்தொற்று அவசரக்காலம் தளர்த்தப்பட்ட பின்னர் ஜப்பானை பார்வையிடும் முதல் வெளிநாட்டுத் தலைவராக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.