தேவி- ஒரு முறை பார்க்கலாம்.!!!.

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு, தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தயாரிக்கவும் செய்துள்ளார், இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதுடன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது.

தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என “ட்ரைலர்” பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம். தமன்னாவை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்யும் பிரபு தேவா, மும்பையில் ஒரு அபார்ட்மெண்டுக்கு குடிவருகிறார். சினிமா சான்ஸுக்காக ஏங்கி, சரியான வாய்ப்பு அமையாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ரூபி என்கிற பெண் தங்கியிருந்த வீடு அது.

devi-review

அந்த உண்மை தெரியாமல் பிரபு தேவா – தமன்னா வந்து சேர, ரூபியின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. “ஒரே ஒரு பெரிய படத்தில் நடித்து, அந்தப் படத்தால் வரும் புகழை அனுபவித்த பிறகு தமன்னா உடம்பை விட்டுப் போய்விடுகிறேன் “என்று டீல் பேசுகிறது. டீல் பேசிய படி நடந்து கொண்டதா, ரூபி பேய் என்பது மீதிகதை ! பெரிய ஆர்ப்பாட்டமோ, அநாவசிய பரபரப்போ இல்லாமல் நகரும் ஒரு நிதானமான பேய்ப் படம் இது.

தமன்னா. ஒரு சாதுவான மனைவி. ரூபி பேயால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்கிரமான பாலிவுட் நடிகை என அசத்துகிறார். காட்டன் புடவையில் பெரிதாகக் கவர்ச்சி இன்றி காட்சி தரும் தமன்னா, வீட்டு வாசலைத் தாண்டியதும் கவர்ச்சிப் புயலாக மாறும் காட்சியில் ஒரு மலைப்பு காட்டுவார், பிரபு தேவா. அதே மலைப்புதான் பார்வையாளர்களுக்கும். நடனத்திலும் பிரபுதேவாவுக்கு இணையாகக் கலக்குகிறார். மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபுதேவா அலுவலகத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு தமன்னாவும் வருவேன் என்று அடம்பிடிக்க, பிரபுதேவா அவரையும் கூட்டிச் செல்கிறார். சென்ற இடத்தில் தமன்னா மாடர்ன் உடை அணிந்து பயங்கரமான நடனம் ஒன்றை ஆடுகிறார். மேலும், சரளமாக ஆங்கிலமும் பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோன பிரபுதேவா, அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது முந்தைய நாள் நடந்தது எதுவுமே தமன்னாவுக்கு தெரிவதில்லை. அவள் உடம்பில் ஏதோ ஆவி புகுந்திருக்கலாம் என்று பயப்படும் பிரபுதேவா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த வீட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார்.

அப்போது சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு பாதியிலேயே இறந்துபோன ரூபி என்ற பெண்ணின் ஆவி அந்த வீட்டில் இருப்பதும், அது தமன்னாவின் உடம்பில் புகுந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆவியை விரட்ட பல முயற்சிகள் செய்தும் பிரபுதேவாவால் முடியவில்லை. இதனால், ஆவியிடம் சமரசமாக பேசி, அந்த ஆவியிடம் 5 கண்டிஷன்களுடன் கூடிய அக்ரிமெண்ட் போடுகிறார். அந்த அக்ரிமெண்ட் படி நடந்தால் ரூபியின் ஆசையை நிறைவேற்ற பிரபுதேவா ஒத்துழைப்பதாக கூறுகிறார். மேலும், ஒப்பந்தம் முடிந்தபிறகு, தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபி வெளியே சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.

பிரபுதேவா ஒப்பந்தப்படி ரூபியின் ஆவி நடந்துகொண்டதா? தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா? என்பதே மீதிக்கதை. பிரபுதேவா இப்படத்தில் ரொம்பவும் இளமையாக தெரிகிறார். நடிப்பிலும் எதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியை கண்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்ந்து பயமுறுத்துகிறார். அதேபோல், அவருக்கே உரித்தான காமெடித்தனம் இந்த படத்திலும் தனியாக பளிச்சிடுகிறது. வித்தியாசமான நடனத்திலும் அசர வைத்திருக்கிறார். தமன்னா இரு வேறு கெட்டப்புகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக, அப்பாவி முகத்துடன் வலம் வரும் காட்சிகளில் எல்லாம் நெகிழ வைத்திருக்கிறார். அதேபோல், மாடர்ன் உடையில், ஸ்டைலாக நடனம் ஆடும் காட்சிகளில் எல்லாம் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது. சதிஷின் வித்தியாசமான தலைமுடி, உடைகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது. நாசர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ரூபியின் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும் நடிப்பில் மிரட்டுகிறார். அதேபோல், நடிகராக வரும் சோனு சூட், தோற்றத்திலேயே மிரட்டுகிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருக்கிறார். ஏ.எல்.விஜய் வித்தியாசமான ஒரு பேய் கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கோரமான பேய்களை பார்த்து வெறுத்துப் போனவர்களுக்கு இந்த படத்தில் அழகான, கிளாமரான பேயை கொண்டுவந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது.

devil-teaser-02-prabhu-deva-tamannaah-sonu-sood-tamil-movie-trailer-2016-updates1-e1476964401338

ஷாஜித் – வாஜித் – விஷால் மிஷ்ரா ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கோபி சந்தரின் பின்னணி இசை மிரட்டல். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இந்த படத்தின் ரியல் ஹீரோ, தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி, மிரட்டியெடுத்துள்ளார். அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே சவால் தான்.

ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் கவர்கிறார். படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது. ஆர்.ஜே.பாலாஜி பிரபுதேவாவின் நண்பராக வந்து சில இடங்களை சமாளித்திருக்கிறார். ரூபியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் அடுத்த நிமிடமே, “ராத்திரி சாப்பிட சப்பாத்தி செய்யட்டுமா அண்ணா..” என்று தேவி பவ்யமாக கேட்கும்போது, அவர் காட்டும் ரியாக் ஷனே போதும்..! கிராமம், மும்பை, அந்த வீடு, படத்தின் லொகேஷன் என்று பல இடங்களில் பயணித்தாலும் படத்தின் கலர் டோன் மாறாமல் டல்லடிக்காமல் கடைசிவரையிலும் அதன் ரிச்னெஸை அப்படியே தொடர்ந்திருக்கிறார், மனுஷ் நந்தன்.

சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியம்..!

சாஜித்-வாஜித், விஷால் மிஷ்ராவின் இசையில் நான்கு பாடல்களுமே கேட்கும் ரகம். ‘பச்சையப்பா காலேஜ்’ பாடலும், ‘ரங்.. ரங்.. ரங்கோலி’ பாடலும் இளசுகளை ஆட வைத்திருக்கும் பாடல். ‘கொக்கா மக்கா கொக்கா’ படல் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. திரில்லர் டைப் படம் என்பதால் பயமுறுத்தலான பின்னணி இசையெல்லாம் போட்டு படுத்தாமல் இசையை உறுத்தாத அளவுக்கு அமைத்திருக்கிறார், ஒலி வடிவமைப்பாளர். நடனம், ஆடை வடிவமைப்பு, செட்டிங்குகள் என்று அனைத்துத் துறையிலுமே வல்லுநர்களாக சேர்ந்து உழைத்திருப்பதால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு படமாக இந்தப் படம் வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் விஜய்யின் அழுத்தமான இயக்கமும், நடித்த நடிகர்களின் பண்பட்ட நடிப்பும், உயிர்ப்புடன் இருந்த கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்.. போரடிக்காமல் இருக்க படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படம் இப்போது ஹிட்டடிக்க பெரிதும் உதவியிருக்கின்றன. என்ன இன்னொரு பேய்ப் படமா? என்று அலட்சியமாக கடந்து போக முடியாதவகையில், இப்படியும் ஒரு பேய்ப் படமா? என்று கேட்க வைத்து படம் பார்க்க அழைத்திருக்கிறது, இந்தக் குழு. மொத்தத்தில் தேவி வழக்கமான பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுவதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.!!!.