ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிச கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட காவல் துறையை  தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை  மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காவல் துறை  தாக்குதலை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் உத்தரவை நடைமுறைப்படுத்தமுயன்றவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறை  மீது தாக்குதலை நடத்தியதை தொடர்ந்தே காவல் துறை  தாக்குதலில் ஈடுபட்டனர் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதுடன் அவர்கள் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்ட காவல்துறையினரை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சரவை பேச்சாளர்  30 காவல்துறையினர் தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.