கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கம் முயற்சித்த போதிலும் அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் நலன் கருதி சுயாதீனமாகச் செயற்பட்டமையின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமே இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ;நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கேள்வி- தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றமை மற்றும் தொடர்ச்சியாக தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?
பதில் : ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவது உண்மையாகும். நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்தும் போது அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளே பாதிக்கப்படுகின்றனர். காரணம் அரசாங்கமே தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுகின்றது. அதற்கு எதிராக ஆணைக்குழு அறிவித்தல்களை விடுக்கின்றது. தேர்தலை நடத்தும் போது அரசாங்கமே இடையூராகக் காணப்படுகிறது.
மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை , 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்தமை , கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படும் என்று கூறியமை என்பவற்றை மீறி ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டமையின் காரணமாகவே அரசாங்கம் ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துகின்றது என்றார்.
கேள்வி-: அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டதாகத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?
பதில் : தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அவற்றை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதி சடங்கின் போது எவ்வித தனிமைப்படுத்தல் சட்டமும் பின்பற்றப்படவில்லை. அதன் போது அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையிலேயே செயற்பட்டது. அரசாங்கத்திற்கு சார்பான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அரசாங்கம் அமைதியைப் பேணுகிறது. மாறாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அவற்றை அடக்க தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னிலை சோசலிச கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணானதாகும். அத்தோடு அமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படும் அரசாங்கத்தின் செயற்பாடு இதன் மூலம் வெளிப்படுகிறது.