நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று (9) வெளியிடப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படாத நிலையிலும் விருப்பிலக்கம் வெளிவராத நிலையிலும், ஆறுமுகன் தொண்டமான், மே மாதம் 26ஆம் திகதியன்று திடீரென மரணமடைந்தார். அவருடைய வேட்பாளர் வெற்றிடத்துக்கு, மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார். அதற்கான வேட்பு மனுவிலும் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டார்.
எனினும், வேட்பாளருக்கான விருப்பு இலக்கம் தாங்கிய வர்த்தமானி அறிவித்தலில், ஜீவன் தொண்டமானின் பெயரில்லை. எனினும், மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பெயரிருக்கிறது. அவருக்கான விருப்பிலக்கம் 3 ஆகும்.
இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ப.திகாம்பரத்தின் விருப்பிலக்கம் 1 ஆகும். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான இராதாகிருஷ்ணனின் விருப்பிலக்கம் 9 ஆகும்.