இங்கிலாந்தில் தனிமைப்படுத்துவதில் புதிய விதிமுறைகள் அமல்

 இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வருகிற இங்கிலாந்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த தொற்றின் பாதிப்பு உள்ளது. ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி அங்கு செல்கிற இங்கிலாந்துவாசிகள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அயர்லாந்து, சேனல் தீவு, மனித தீவுவாசிகளுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு

விமானம், ரெயில், படகு என எந்தவொரு போக்குவரத்து சாதனத்தில் அங்கு சென்றாலும், தனிமைப்படுத்துதல் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான முகவரியை தராவிட்டால், அரசு செலவில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.

தனிமைப்படுத்துதல் விதியை அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். வேலைக்கு போகக்கூடாது. பள்ளி, பொது இடங்கள் என எங்கும் போகக்கூடாது. அவர்களை பார்க்க யாரும் வரவும் கூடாது.

14 நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்திக்கொள்ள தவறினால், அவர்களுக்கு 1000 பவுண்ட் (சுமார் ரூ.96 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.