அவுஸ்ரேலியாவின் நெருக்கடியான அட்டவணை

அவுஸ்ரேலியா அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக பிப்ரவரி 22-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கியமான அணி. அந்த அணி சில நேரங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கும்.

பொதுவாக இரண்டு தொடருக்கிடையில் சில நாட்களாவது இடைவெளி இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நடைபெற இருக்கும் தொடருக்கிடையில் ஒருநாள் மட்டுமே இடைவெளி உள்ளதுபோல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 22-ந்திகதி அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்குப்பின் சுமார் 15 முதல் 16 மணி நேரத்திற்குள் இந்தியாவிற்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி விளையாட இருக்கிறது.

டி20 போட்டி முடிந்து 16 மணி நேரத்திற்குள் இந்தியா வந்தடைந்து டெஸ்டில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இது அவுஸ்ரேலியா அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, அவுஸ்ரேலியாவின் டி20 போட்டிகளில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஸ்மித், வார்னர் போன்றோர்தான் விளையாடுவார்கள். முக்கிய வீரர்களுக்கு இலங்கை டி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு முன் கூட்டியே புறப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன் 2014-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் நவம்பர் 3-ந்திகதி டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு, அடிலெய்டில் நவம்பர் 5-ந்திகதி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டி20 போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.