அமரிக்காவில் கறிப்பினத்தவருக்கு எதிரான அராஜகங்களுக்காக குரல்கொடுக்கும் இலங்கையர்கள், நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன:
தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக மதவாத அரசியலின் ஓர் ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது. காலாகாலமாக தொல்பொருள் திணைக்களம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் புறக்கணித்துச் செயற்பாடுவது ஒரு தொடர்கதையாகத் தொடர்கிறது.
தொல்பொருள் திணைகளத்தில் உருவாக்கப்பட்டுள்ள 45 பேர் அடங்கிய செயலணியில் ஒருவர் கூட தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து நியமிக்கப்படவில்லை. அது போல் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்துவாழும் கிழக்கு மாகாணத்தில் அப் பகுதியில் புராதன இடங்களை அடையாளப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய ஆணைக்குழுவிலும் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தோர் நியமிக்கப்படவில்லை என்பது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இந்தச் செயற்பாடானது இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இந் நாடு சொந்தமில்லை என்பதனைக் காட்டுவதாக உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பூர்வீக தொடர்புகள் மற்றும் ஆதாரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்த ஆதாரங்களை இலாதொழிக்கும் நோக்குடனும் அல்லது இந்தப் பிரதேசங்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பூர்வீகம் இல்லை என்பதாக காட்டும் நோக்குடன் இந்த குழு அமைக்கப்பட்டதா என்ற சந்தேகமே வலுப்பெறுகின்றது.
இந்த தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் ஆரம்ப காலம் தொட்டே பிரச்சினைக்குரியதாகவே உள்ளது. கடந்த அரசங்கத்தில் கூட எமது தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சபையில் ஒரு தமிழரையாவது உட்படுத்த வேண்டும் என்ற முயற்சி கூட இறுதி நேரத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கைகூடாமல் சென்றுவிட்டது.
இந்நிலையில், கிழக்கு மாகாண தொல்பொருள் சுவடுகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் நியமித்துள்ளமை சந்தேகத்தினை மேலும் வலுவடையச் செய்துள்ளது. இந்த நாட்டை மதவாத அரசியலுக்குள் இழுத்துச் செல்ல முயல்கின்ற தரப்பினர் ஒரு விடயத்தினை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு இனங்களும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் வாழுகின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
அமரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக இடம்பெறும் வஞ்சனைகளை எதிர்த்து சமூக வலைத்தளங்களினூடாக “Black matters” என்ற கோசத்தினை உருவாக்கும் இலங்கையர்கள், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
Eelamurasu Australia Online News Portal