ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம் என டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் திகதி கூடி ஆலோசித்தது. அதில் டி20 உலகக் கோப்பையை எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. உலகக் கோப்பைத் தொடர் 2022-ல்தான் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானது. இதற்கு ஐசிசி தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஸ்போர்ட் ஸ்கீரின் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ‘‘நியூசிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா எச்சரிக்கை வழிமுறை 1-க்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

இதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாமே? இது ஒரு யோசனைதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.