பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போது இருக்கும் ஒரே வழிமுறை சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. வரிசையில் நிற்க வைத்தால்கூட ஆபத்தை உணராமல் சிலர் நெருக்கமாக நிற்கின்றனர். இதன் காரணமாக எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவிவிடுகிறது.
டிரான்சில்வேனியாவின் க்ளூஜ் நகரைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளரான கிரிகோர் லூப், 39 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார். தன் கண் எதிரே மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் செல்வதைப் பார்த்து இந்த ஷூவை தயாரித்திருப்பதாக இவர் கூறுகிறார்.
இந்த ஷூக்களை அணிந்த இரண்டு நபர்கள், நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்கும் என்கிறார்.
இவரது இந்த புதிய வடிவமைப்பை பார்த்து சில கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு ஜோடி ஷூவை தயாரிக்க இரண்டு நாட்கள் ஆவதாகவும், இதற்கு ஒரு சதுர மீட்டர் தோல் தேவைப்படும் என்றும் கூறுகிறார். அதனால் ஒரு ஜோடி ஷூவின் விலை 115 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8650) என நிர்ணயம் செய்துள்ளார்.
இந்த ஷூவின் முன்பகுதி மிக நீளமாக இருப்பதால், இந்த ஷூவை அணிந்துகொள்ளும் நபர்கள், வரிசையில் நிற்கும்போதோ, நடந்து செல்லும்போதோ முன்னால் செல்லும் நபர்களிடம் இருந்து சற்று விலகி செல்வது உறுதி செய்யப்படும். ஆனால், பின்னால் வருபவர்கள் இதுபோன்ற ஷூக்களை அணியாமல் சாதாரண ஷூக்களை அணிந்து வந்தால் சமூக விலகல் கேள்விக்குறிதான்.
Eelamurasu Australia Online News Portal