சார்ஜாவில் பாலைவன மண்ணில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி செய்யப்பட்டதை மந்திரி டாக்டர் தானி அல் ஜையூதி நேரில் ஆய்வு செய்தார்.
அமீரகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாலைவன மண்ணின் தன்மை மாற்றப்பட்டு, உப்பு நீர் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு இயற்கையான சவால்களை முறியடிக்கும் வகையில் சார்ஜாவில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
அமீரக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் தென்கொரியாவின் வேளாண்மை நிபுணர்கள் கூட்டு முயற்சியில் இந்த சாதனையை செய்துள்ளனர். சார்ஜாவின் பாலைவன மண்ணில் 1,000 சதுர மீட்டர் நிலம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டு பண்படுத்தப்பட்டது. சாதாரணமாக நிலத்தை உழுது விதை நெல் மூலம் நாற்றங்கால் பிறகு நடவு என அனைத்தும் செய்யப்பட்டது.
இந்த வயல்வெளியில் சோதனை முயற்சியாக ஏசெமி (ஜப்பானிக்கா) மற்றும் எப்.எல் 478 (இண்டிகா) என்ற இரண்டு வகையான நெல் ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த வகை நெல் ரகங்கள் அதிக வெப்பநிலை, உப்புத்தன்மை மற்றும் குறைந்த வளம் உள்ள மண்ணில் நன்றாக வளரக்கூடியவையாகும்.
இந்த நெல் நடவு செய்யப்பட்ட வயல்வெளியில் நிலத்தடி சொட்டு நீர் பாசன முறை மூலம் தண்ணீர் அளிக்கப்பட்டது. இந்த நெல் ரகங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடவு செய்யப்பட்டு கடந்த மே மாதம் முதல் 3 கட்டமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல்மணிகள் இயற்கையாக தரமாக விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெல் சாகுபடி செய்யும் பகுதியை அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைமாறுபாடு துறை மந்திரி டாக்டர் தானி அல் ஜையூதி மற்றும் அமீரகத்திற்கான தென்கொரிய நாட்டின் தூதர் குவான் யாங்வோ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை கையில் எடுத்து பார்த்து அதன் தரத்தை உறுதி செய்தனர்.
தற்போது 763 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அந்த வயல்வெளிகளில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. சார்ஜாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.