அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்தில்தான், வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டிச் சாரதியான எனது அப்பாவும் சுட்டுக்கொல்லப்பட்டார். தந்தையை இழந்து, மனிதவேட்டை நடந்த பகுதிக்குள் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இருபத்திநான்கு வருடங்கள் கழிந்தும் மனதை விட்டு அகலாமல் ரணமாகப் பதிந்துள்ளது. தற்போதும் கனவாக வந்து தூக்கத்தை கலைத்துக் கொண்டிருக்கின்றது. இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள். இப்போது நினைத்தாலும் மனதை உலுக்கும் சம்பவம் அது.
அப்போது எனக்குப் பதினைந்து வயது. பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மூன்று தம்பிமார். யாழ்நகரத்தில் இருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்தில்தான் எங்களது வீடு இருந்தது. எங்கள் ஊரிலிருந்து ஏறத்தாழ ஏழு கிலோமீற்றர் தூரத்தில், இலங்கை இராணுவத்தின் முதன்மை இராணுவ முகாம்களில் ஒன்றான பலாலி தளம் இருந்தது. அங்கு அடிக்கடி பாரிய சண்டைகள் நடக்கும். அவ்வாறான நேரங்களில், இராணுவத்தின் எறிகணை எங்கள் ஊர் மனையிலும் வீழ்ந்து வெடிக்கும். இதனால் எங்களது பல பகல், இரவுகள் பதுங்குழிக்குளேயே கழிந்தன.
அந்த நேரத்தில்தான் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தர வரப்போகின்றது, அதற்காக இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பரவலாகப் பேசப்பட்டது. சில நாட்களில் தமிழர் தாயகப்பகுதிக்கு வந்த இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்களில் நிலைகொண்டது. இனிப்பிரச்சனையில்லை, அச்சப்படத் தேவையில்லை இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என சந்தோசமடைந்தோம். ஆனால் அந்த சந்தோசம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்த வந்த இராணுவம் அதைச் செய்யவில்லை. இதனால்; ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி பல அகிம்சைப் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த தியாகி திலீபன் அவர்களும் தியாக மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் சண்டை தொடங்கியது. மீண்டும் எறிகணைச் சத்தங்கள், விமானக்குண்டு வீச்சுக்கள் என்ற பழையை அவல வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டோம். விமானங்களின் பயங்கர இரைச்சல்கள் முன்னரைவிட அதிக அச்சத்தைத் தந்தன.
(ஓப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வந்த காந்தி தேசத்து அமைதிப்படை, காந்திய வழியில் நியாயம் கேட்டு ஒரு உயிர் ஆகுதியாக்கப்பட்ட பின்னும் தனது சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆயுதவழியில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்தியது. இதன் முதற்கட்டமாக சமகால அரசியல் நிலைமை தொடர்பான கருத்துக்கள் மக்களைச் சென்றடையாத வண்ணம், யாழ்ப்பாணத்தில் இயங்கிய பத்திரிக்கை அலுவலகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. சுயாதீன வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் தலைமையை அழிக்கும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் இந்திய சிறப்பு பரா துருப்பு ஒக்ரோபர் 10ம் நாள் உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கி தாக்குதலை ஆரம்பித்தது. அதேவேளை பலாலி, கோட்டை, நாவற்குழியில் அமைந்திருந்த முகாம்களில் தரித்திருந்த இந்தியப்படையினர் கனரகப்பீரங்கிகள், விமானப்படையினரின் பக்க உதவியுடன் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். பலாலியில் இருந்தும் நாவற்குழியில் இருந்தும் நகர்ந்த இராணுவம் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டு ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலால் முகாமிற்குள் முடக்கப்பட்டிருந்தது. யாழ்மாவட்டத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவதே இராணுவ நடவடிக்கைகளின் பிரதான நோக்கமாக இருந்தது))
இராணுவம், முகாம்களில் இருந்து அகோரமான எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்திக் கொண்டு முன்னேறியது. ஆட்லறி, எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களுக்குள் வீழ்ந்து வெடித்துச் சிதறின. விமானப்படை மக்கள் குடியிருப்புக்களை, மக்கள் அதிகம் கூடுமிடங்களை இலக்குவைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்திய இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் திகிலடைந்த மக்கள் எங்கு பாதுகாப்புத் தேடுவது என தெரியாமல் தவித்தனர். பலர்; பதுங்கு குழிகளை வெட்டி தற்பாப்பு தேடினார்கள். சிலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு அகதிகளாக வெளியேறினர். பலர் பாதுகாப்பானது எனக் கருதி கோயில்களிலும் தேவாலயங்களிலும் அடைக்கலம் தேடினர்.
சிறிலாங்கா இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலில் இருந்து பாதுகாக்க வீட்டில் நானும் தம்பிகளுமாகச் சேர்ந்து வெட்டியிருந்த பதுங்கு குழியை மீளத் துப்பரவாக்கினோம். இந்திய இராணுவத்தின் எறிகணைத்தாக்குதல்கள் அகோரமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்த காரணத்தினால் சில இரவுகளும் பல பகல்களும் பதுங்குழிக்குள்ளேயே கழிந்தன. இருந்தாலும், இராணுவம் எங்கள் ஊரை நெருங்கி வர வர எறிகணைத்தாக்குதல்களும் அதிகமாகின. மக்கள் வாழ்விடங்களுக்குள் குண்டுகள் சரமாரியாக விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன.
பணி நிமித்தம் அப்பா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்தார். அன்றைய அசாதாரண சூழ்நிலையில் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், கிடைத்த சிறிய இடைவேளையில் எங்களைப் பார்க்க வந்தார். கலவரத்துடன் இருந்த எங்களது முகங்களைப் பார்த்த அவரது முகத்தில் மிகுந்த கவலை தென்பட்டது. ஏனெனில் எங்களை தனியே விட்டுச் செல்ல முடியாது. கடைசித்தம்பி அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதான். சிறிது நேரம் யோசித்த அவர், ”எல்லாரும் என்னோட வந்து விடுதியில் தங்குங்கோ, வைத்தியசாலைதானே பாதுகாப்பாயும் இருக்கும்” எனச் சொன்னார். நாங்களும் அப்பாவுடன் போவதற்குத் தயாரானோம். அப்போது என்னுடைய நண்பனிடம் நாங்கள் வைத்தியசாலைக்குச் செல்லும் விடயத்தை கூறினேன். அவன் தானும் எங்களுடன் வருவதாகக் கூறி, அவனுடைய பெற்றோரிடம் சொல்லிவிட்டு வந்தான். அத்துடன் உறவினர் ஒருவரின் மகளான பிரியாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எங்களுடன் வந்தாள். மூன்று தம்பிகள், நான், அம்மா, மற்ற இருவரும் சேர்த்து மொத்தமாக ஏழு பேர் வைத்தியசாலையில் சென்று அப்பாவுடன் விடுதியில் தங்கினோம்.
((யாழ் நகரத்தில் அமைந்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்றவற்றுக்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம்பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகளையும் தன்னகத்தே கொண்ட வடமாகணத்தின் பிரதான வைத்தியசாலை மட்டுமல்ல அது ஒரு போதனா வைத்தியசாலை))
இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த முகாம்களில் ஒன்றான கோட்டை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. அங்கிருந்த இராணுவம் முன்னேறுவதற்கு தனது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அதனால் நகரம் மற்றும் நகரத்தை அண்டிய பகுதிகள் எங்கும் எறிகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. வைத்தியசாலை பாதுகாப்பானது எனக் கருதியிருந்தாலும், அங்கு கேட்டுக்கொண்டிருந்த கடுமையான எறிகணைச்; சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் விமானப்படை தாழப்பறந்து நடாத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும் அச்சத்தையே தந்து கொண்டிருந்தன. ஆயினும் இராணுவம் வைத்தியசாலைக்குள் தாக்குதல் நடத்தாது என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தாலும் எறிகணைத் தாக்குதல்கள் செறிவாக நடைபெறும் போது, அப்பாவின் விடுதிக்கு அருகில் இருந்த கதிரியக்கப் பகுதி மற்றும் பிரதான அலுவலகத்தை உள்ளடக்கிய மேல்மாடிக்கட்டிடத்திற்குள் போய் பாதுகாப்புத் தேடுவோம். இரவு வேளையில் பணியாளர்கள், நோயாளர்கள், விடுதியில் தங்கியிருந்தவர்கள் என எல்லோரும் அக்கட்டிடத்தின் நடைபாதையில் தான் படுப்போம்.
இராணுவத்தாக்குதலில் காயமடைந்து பல பகுதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட பொதுமக்களால் வைத்தியசாலை நிரம்பியிருந்தது. நோயாளர் விடுதிக்குச் சென்று காயமடைந்து வரும் பொதுமக்களைப் பார்க்கும் போது மிகவும் அச்சமாக இருந்தது. (அந்த அழிவின் கோரம் நெஞ்சை உறையவைக்கும்). பலர் கால் இழந்து கையிழந்து கொண்டுவரப்பட்டார்கள், சதைத்துண்டங்களாக வந்தவர்களைப் பார்க்கும்போது அச்சமாக இருந்தது. அப்பாவுக்கு நிற்க நேரமில்லை. நோயளர் காவுவண்டியில் காயக்காரரை ஏற்றுவதும் இறக்குவதுமாக ஓடிக்கொண்டிருந்தார். வெளியே சென்ற அப்பா திரும்பிவரும் வரை வாசலில் நின்று வந்திட்டாரா! என பல தடவைகள் காத்திருந்திருக்கிறோம். எதிர்பார்த்திருந்த கணங்கள் ஏராளம். அப்பா திரும்பி வந்துவிட வேணும் என பல கடவுள்களை வேண்டிக் கொண்டு இருந்திருக்கின்றோம்.
தீபாவளித் தினமான அன்று கடுமையான எறிகணைத்தாக்குதல்களையும் விமானத்தாக்குதல்களையும் நடாத்திக் கொண்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது இந்திய இராணுவம். எல்லோரும் வழமைபோல் கட்டிடப்பகுதிக்குள் சென்று பாதுகாப்புத் தேடினோம். எறிகணைத்தாக்குதல் குறைவாக இருக்கும் சமயங்களில் அம்மா ஓடிச்சென்று சமைத்தார். 11.30 மணியளவில் வெளி நோயாளர் பிரிவு இயங்கும் பகுதியில் செல்விழுந்து வெடித்தது.
மத்தியானம் ஒரு ஓய்வு நேரம் பார்த்து அப்பா எங்களுக்கு சாப்பாட்டைக் குழைத்து உருண்டைகளாக்கித் தர, அக்கட்டிடத்தின் ஓரத்தில் நின்று சாப்பிட்டோம் (அவருடைய கையால் நாங்கள் சாப்பிடும் கடைசிச் சாப்பாடு என்பதை அறியாமால்). எங்களுக்கு குழைத்துத் தந்து விட்டு, அப்பா தானும் சாப்பிட்டார். மீண்டும் எறிகணைத் தாக்குதல் அதிகமாக, உணவை முடித்த உடனேயே நாங்கள் கட்டிடங்களுக்குள் சென்றுவிட்டோம்.
சிறிது நேரத்தின் பின் ஒரு எறிகணை எட்டாம் இலக்க நோயாளர் விடுதியின் மீது வீழ்ந்து சிதறியதால் அங்கிருந்த நோயாளிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்;. இதனால், அலுவலகக்கட்டிடப் பகுதிக்கு அருகிலிருந்த நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களையும் அக்கட்டிடத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். எழுந்து நடக்க முடியாதவர்களை தள்ளுவண்டிகளிலும் தோள்களிலும் சுமந்து கொண்டுவந்து மெத்தைகளை நிலத்தில் போட்டு படுக்க வைத்தனர்;. அதில் சிலர் சேலைன் மருந்து ஏற்றியபடியே கொண்டுவந்து விடப்பட்டனர். இதனால் அவ்விடம் நோயாளர்கள், வைத்தியர்கள், பணியாளர்களினால் நிரம்பியிருந்தது.
பிரதான அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வெளிவாசலுக்கு நேரே நின்று பார்த்தால் யாழ் மணிக்கூட்டுக் கோபுரப்பகுதி தெரியும். அந்த வாசல் வழியாகத்தான் நோயாளர்களை வைத்தியசாலைக்குள் கொண்டு வருவார்கள். இடையிடையே வாசலுக்குச் சென்று வெளியில் என்ன நடக்கின்றது என பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை மூன்று மணியளவில், அலுவலகத்திற்கு நேரே இருக்கும் பிரதான வாசலில், வெள்ளைக் கொடியுடன் வந்த வாகனம் ஒன்று பிரதான வீதியிலிருந்து வைத்தியசாலைக்குள் வருவதற்கு திரும்பியபோது, மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு முன்னேறி வந்;திருந்த அமைதிப்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதிலிருந்து சாரதி மட்டும் வைத்தியசாலைக்குள் ஓடிவந்தார். காயக்காரர்களுடன் சேர்த்து வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தப்பி வந்த சாரதி ”நான் குருநகரில் இருந்து காயக்காரரை ஏத்திக் கொண்டு வந்தனான்.
உள்ளுக்குள்ள கொண்டு வரமுன்னம் இப்பிடி நடந்து போச்சுதே” என்று கதறிக் கொண்டிருந்தார். ”அங்க சனமெல்லாம் வீதியிலையும் வீடுகளிலையும் காயப்பட்டும் செத்தும் போய் கிடக்குதுகள் அவங்களை ஏத்திக் கொண்டுவர ஒண்டுமில்லை, ஆக்களுமில்லை. இவங்களாவது பிழைக்கட்டும் எண்டு ஏத்திக் கொண்டு வந்தன். கடைசியில வாசல்ல வைச்சே அவங்களையும் கொன்றுபோட்டாங்களே….. அங்க தெருவெல்லாம் பிணமாத்தான் கிடக்குது” என்றார். இதைக் கேட்டபோது உடல் ஒருகணம் நடுங்கியது.
கோட்டையிலிருந்த இராணுவம் நகருக்குள் முன்னேறி வந்துவிட்டதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். நான் அப்பா இருந்த அலுவலக அறைக்குச் சென்றேன் அங்கு அப்பாவுடன் எனக்கு அடுத்த தம்பியும் கடைசித்தம்பியும் இருந்தனர். அப்பா என்னை அம்மாவுடன் நிற்குமாறு கூறினார் நான் அம்மாவிடம் வந்து விட்டேன். அம்மாவும் நானும் மூன்றாவது தம்பியும் நண்பனும் பிரியாவும் கதிரியக்க கட்டிடப்பகுதிக்குள் நின்று கொண்டிருந்தோம். அம்மா மூன்றாவது தம்பியுடன் மாடிப்படியில் இருந்தார். நான் நண்பனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த எல்;லோரும் பயத்துடன் என்ன நடக்குமோ! என பேசிக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட நான்கு மணியளவில் திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் மிக அண்மையில் கேட்கத் தொடங்கியது. வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இராணுவம் நாம் இருந்த பகுதியை நோக்கிச் சுட்டுக்கொண்டு வந்தது. எல்லோரும் சத்தமிட்டவாறே ஆளுக்காள் தள்ளுப்பட்டுக் கொண்டு ஓடினார்கள், நோயாளர்கள் செய்வதறியாது கத்தினார்கள். தம்பிக்கு பக்கமாக இருந்த சுவரில் துப்பாக்கிவேட்டு ஒன்று பட்டுத் தெறித்தது. இராணுவம் வைத்தியசாலைக்குள் வந்தால் அவர்களுடன் பேசலாம் என நம்பிக்கையுடன், வைத்தியசாலைச் சீருடையணிந்து முன்னுக்கு நின்ற பணியாளர்கள் பிணங்களாகச் சரிந்து கொண்டிருந்தார்கள். தம்பியை இழுத்துக் கொண்டு வந்த அம்மா என்னை கதிரியக்கப் பகுதிக்கு எதிர்ப்பக்கம் தள்ளிவிட்டார். நானும் நண்பனும் ஒரு அறைக்குள் செல்ல, பின்னுக்கு வந்த அம்மாவும் தம்பியும் அறைக்குள் நுழைய முயற்சித்தனர் அது முடியாமல் போக எதிர்ப்பக்கமாக இருந்த அறைக்குள் செல்ல எத்தனித்தார், அதுவும் முடியவில்லை. உடனே அந்தக் கொறிடோரில் விழுந்து படுத்து விட்டனர். அதேசமயம் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்த கைக்குண்டில் பிரியா காயமடைந்து விழுந்தாள். தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் வைத்தியசாலை வளாகத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தன. ஐயோ! ஐயோ! என்ற கூக்குரல்கள் முருகா! முருகா! நல்லூரானே! அம்மாளாச்சி காப்பாற்று காப்பாற்று என எல்லா குலதெய்வங்களையும் கதறி அழைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் ’வி ஆர் சிவிலியன்ஸ், வி ஆர் சிவிலியன்ஸ்’ என்ற சத்தங்களும் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. மக்களின் கதறல்கள் எதையும் செவிமடுக்காத ’அமைதிப்படையின’; கொலை வெறியாட்டம் ஒரு மணித்தியாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு மணித்தியாலத்தின் பின் மக்களின் அழுகுரல் சத்தங்கள் சற்று அடங்கிக்கொண்டு போக, துப்பாக்கிச் சத்தமும் அடங்கிக் கொண்டு போனது. அந்தி சாய்ந்து, இருள் கவிழ்ந்தது. கீழ்த்தளப்பகுதியில் உள்ளவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தனரோ என்னவோ! அங்கு படையினர் நடமாட்டம் குறைந்து, மேல்மாடியில் வைத்தியர்கள் தங்கும் பகுதியில் படையினரின் நடமாட்டம் கூடுதலாக இருந்தது. அத்துடன் அங்கிருந்து வெளிப்பகுதியை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். இந்தியப்படையின் கிந்தி உரையாடல்கள் இராணுவ சப்பாத்துச் சத்தங்களைத் தவிர, வளாகத்தில் மயான அமைதி நிலவியது. எங்களுக்கு வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்ன செய்வதென்றும் புரியவில்லை.
கொறிடோர்ப் பகுதியில் இருந்த அம்மாவுக்கும் தம்பிக்கும் என்ன நடந்தது! காயமடைந்த பிரியா எப்படியிருக்கின்றார்! அப்பாவுக்கு என்ன நடந்தது! அப்பாவுடன் இருந்த தம்பிகளுக்கு என்ன நடந்தது! எந்தக் கேள்விகளுக்கும் விடை தெரியாமல் பயத்தில் உறைந்து போய் இருந்தோம். அங்கிருந்து வெளியேறிச் செல்ல முடியாது. இடையிடையே கேட்ட துப்பாக்கி வேட்டுச்ச்சத்தங்கள் காதைப்பிளந்தன. அறை வாசலில் இருந்து மெதுவாக தலையை நீட்டி கோறிடோரில் இருந்த அம்மாவும் தம்பியும் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தில் பலர் படுத்திருந்தார்கள். எல்லோருமே பிணங்களுடன் பிணங்களாகப் படுத்திருந்தனர். சத்தமாகவும் பேசமுடியாது. மெதுவாக இது அம்மாவா? தம்பியா? என தவழ்ந்து சென்று விசாரித்தேன். பக்கத்திலிருந்தவர்கள் ”சத்தம் போடாமல் படுத்திரு, அசைவு தெரிந்தால் சுடுவாங்கள்” என்று சொன்னதால் எனது தேடலை தொடர முடியவில்லை. அப்படியே படுத்தேன், மனது வலித்தது. ஒவ்வொரு நிமிடமும் கனமாக இருந்தது.
கிருஷண பகவான், கொடூர குணம் கொண்ட நரகாசுரனை வதம் செய்து மக்களைக் காப்பாற்றிய நாளை, இந்தியதேசம் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடும் தினத்தில் நிகழ்ந்தது இந்தக் கொடூரம். அங்கு மக்களைக்காப்பாற்றக் கிருஷ்ணன் வரவில்லை. இந்திய அமைதிப்படை உருவத்தில் வந்த நரகாசுரனிடமிருந்து தங்களைக் காப்பாற்ற முருகா! முருகா! என மக்கள் கத்தியழைத்த போதும் முருகன் வரவில்லை. அன்று நரகாசுரனாக வந்த இந்திய அமைதிப்படை தனது கொலைவெறியை நிறைவேற்றி எங்கள் கண்ணீரில் அந்தத் தீபாவளியைப் பதிவு செய்தது.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. மக்களிடையே மயான அமைதி. இராணுவத்தின் குரல்கள் மட்டும் இடையிடையே பலமாக கேட்டுக் கொண்டிருந்தன. அந்த மயான அமைதிக்குள் ’ஜயோ என்னைக் காப்பாற்றுங்கோ! என்னைக் காப்பாற்றுங்கோ!’ என்ற, ஒரு பெண்ணின் அவலக்குரல் போராடி ஓங்கி ஒலித்து பின்னர் தளர்ந்து அடங்கிக்கொண்டிருந்தது. அந்த அவலக்குரலைத் தாண்டிக் கேட்ட இராணுவச் சிப்பாய்களின் வெறிக்கூச்சல்கள் கட்டிடத்தை அதிரவைத்தன. எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதை அடிக்கடி சுற்றி வந்து உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இடையிடையே கேட்ட ப+ட்ஸ் சத்தங்கள் மூலம் உணர முடிந்தது. அதனால்தான்; அதிலிருந்தவர்கள், சத்தம் போட வேண்டாம் கதையாதைங்கோ! என மற்றவர்களை கட்டுப்படுத்தினார்கள்;. அந்த இரவின் நிசப்தத்தில், பெற்றோர்கள் எங்கே? தம்பிகள் எங்கே? என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விகள் மனதை மேலும் மேலும் குடைய நண்பனுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு படுத்திருந்தேன்.
நாங்கள் கொறிடோரின் முடிவுப்பகுதிக்கு சற்றுமுன்னால் இருந்த அறை வாசலில் இருந்தோம். அக்கொறிரோடில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களின் முனகல் சத்தங்களை வைத்துப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நடு இரவில் ஒருவர் ’வீ ஆர் சிவிலியன்ஸ் பிளீஸ் டோன்ற் கில் அஸ்’ என சத்தமாகக் கூறினார். சிறிது நேரத்தில் மேல்மாடியிலிருந்து இராணுவம் நடந்துவரும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து குரல் வந்த பகுதியை அதிரவைத்த குண்டு சத்தமும் தொடர்ந்து கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தமும் அமைதியைக் குலைத்தன. அதன் பின்னர் அந்த மனிதரின் சத்தம் கேட்கவேயில்லை. பலர் காயப்பட்டு சிகிச்கையின்றி இறந்தனர். சிலர் இரத்தம் போக தண்ணீர் கேட்டு முனகிக் கொண்டிருந்தார்கள். காயப்பட்டு மரணத்தின் விழிம்புக்கு சென்று கொண்டிருந்தவர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்ற ஆதங்கத்திலே அல்லது சுயநினைவின்றியோ காப்பாற்றுமாறு எழுப்பிய அபயக்குரல் அவர்களின் ஆத்மாவிற்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தது. இடையிடையே துப்பாக்கிச்சத்தங்கள் பல தடவைகளாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு உயிர் பறிக்கப்படுகின்றது என்பதை மட்டும் உணரக்கூடியதாக இருந்தது. யார் இறந்து விட்டார்கள், யார் யார் இறந்து கொண்டிருக்கின்றார்கள், தப்புவோமா! என்பது எதுவும் தெரியாமல் கழிந்தது அந்த இரவு.
மறுநாள், மரணத்தின் கணங்களுடன் விடிந்தது காலைப்பொழுது. மோசமான இரத்த வாடையும் வெடிமருந்தின் மணமும் காற்றில் பரவி நின்றன. அம்மாவும் தம்பியும் எங்காவது கண்ணில் தென்படுகின்றார்களா? என எட்டிப்பார்த்தபோது கொறிடோரின் முடிவில் அம்மாவும் தம்பியும் வேறு சிலரும் படுத்திருந்தது தெரிந்தது. காயப்பட்ட பிரியா அம்மாவிற்கு முன் படுத்திருந்தார். அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் கொல்லப்பட்டிருந்தனா. சிலர் காயத்துடன் கிடந்தனர். எல்லோரும் பிணங்களுடன் பிணங்களாகவே கிடந்தனர். அடுத்தது என்ன நடக்குமோ!
கொல்லப்பட்டுவிடுவோமா! என்ற அச்சம் ஒன்றுசெர, ஒருவரையொருவர் நிசப்தமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தலையை சற்று உயர்த்தி அம்மாவின் கண்களைப் உற்றுப்பார்த்தேன். அம்மா தம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு வாங்கிற்கு கீழே அசைவற்றுப் படுத்திருந்தார். என்னைப்பார்த்ததும் சிறு நிம்மதி அவரின் முகத்தில் தெரிந்ததுடன் உதட்டசைவில் கவனம் என சொன்னார்;. அதையும் தாண்டி, ஏக்கம், பயம் கலந்த பரிதவிப்பு அவரின் முகத்தில் தெரிந்தது. கொரிடோரில் கொல்லப்பட்டிருந்த பிணங்களைக் கடந்து இராணுவம் வரவில்லை அதனால் பின்னால் இருந்தவர்கள் உயிர்தப்பியிருந்தனர்.
மேல் தளத்தில் இந்தியப்படையினர் கதைக்கும் சத்தங்களும் சிரிப்பொலிகளும் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன. பத்து மணியளவில் இந்திய இராணுவத்திற்கும் சிலருக்குமிடையில் சம்பாசணை நடைபெறுவதை கேட்க முடிந்தது. இங்கு நோயாளர்களும் ஊழியர்களும் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என ஆங்கிலத்தில் தெளிவுபடுத்தப்படுகின்றது. மனதுக்குள் ஒரு சிறுதுளி நம்பிக்கை கீற்று. நாங்கள் காப்பாற்றப்படலாம். யாரோ எங்களுக்காக கதைக்கின்றனர் என்ற நினைப்பு சிறு தெம்பைத்தந்தர, சற்று தலையைத் தூக்கிப்பார்த்துக் கொண்டிருந்தபோது வைத்தியசாலைச் சீருடையுடன் நால்வர், இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் யாராவது உயிருடன் எஞ்சியிருந்தால் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் கதைத்துக் கொண்டிருப்பதாக புரிந்து கொண்டேன். அப்போது இராணுவத்தினர் ஆயுதங்களின்றியே (ஏறக்குறைய எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற நினைந்திருந்தனர் போலும்) கதைத்துக் கொண்டிருந்தனர்;. திடீரென ஒரு சீக்கிய இராணுவத்தினன் மேல்மாடிக்குச் ஓடிச்சென்றான். திரும்பி வந்தவன் கையில் துப்பாக்கி. வந்த வேகத்தில் அவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினான். முதலில் தாதி இரண்டாவதாக வைத்தியர்; பின்னர் மற்றைய தாதி தொடர்ந்து மற்றைய ஊழியர் என வரிசையாகச் சுட்டான். வைத்தியர் சூடுபட்டு விழும் போது முருகா என்ற சத்ததுடன் விழுந்து இறந்தார். அந்தச் சம்பவம் எமக்கு ஏற்பட்ட சிறு நம்பிக்கையை மட்டுமல்ல அவர்களின் உயிரையும் சேர்த்துப்பறித்தது. மக்களுக்காக கெஞ்சிக் கொண்டிருந்த அவர்களது உடல்கள் ’தொப்’ என்று விழுந்து இரத்தத்தில் குளித்தன. அங்கு அசைவின்றிப் படுத்திருந்த மக்களின் வற்றிய கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்தன. அதில் சூடுபட்ட ஒருவர் பஞ்சபுராணமும் சிவபுராணமும் பாடிய படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்களின் பின் இறந்துபோனார்.
தப்பியிருந்த மக்களின் முகங்களில் ஏற்பட்ட சிறு நம்பிக்கையும் தகர்ந்தது. நாம் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று புரியவில்லை. கொல்லப்பட்டவர்கள் நோயாளிகளும் வைத்தியசாலை ஊழியர்களும் என்பதை உறுதிப்படுத்துவதில் யாருக்கும் சிரமம் இருக்காது. தொடர்ந்து இன்று வைத்தியசாலையின் இன்னுமொரு பக்கத்திலிருந்து வந்த வைத்தியர் மற்றும் தாதியர்கள் படுகொலை நடந்த இடத்திற்கு வந்து காப்பாற்ற முற்பட்டபோதும் ஏன் சுடப்பட்டார்கள்; என்பது புரியவில்லை. தொடர்ந்து என்ன நடக்கப்போகுதோ! என் நண்பனின் பார்வையில் இருந்து புரியமுடிந்தது. தாய் தந்தையரை விட்டு அவனையும் கூட்டிவந்தது தவறோ? என மனம் எண்ணியது. காயப்பட்டவர்கள் தங்களின் வேதனைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகக் கிடந்தனர். அடுத்தகணம் என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் அப்படியே அசைவற்று பேச்சற்றுப் பிணங்களைப்போல படுத்திருந்தோம். மதியத்தைத் தாண்டியும் அங்கு எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருந்தோம்.
மாலைவேளையில் ஒரு பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது. இங்கு நோயாளர்களும் வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும்தான் இருக்கிறார்கள் எனக்கூறி கதறி அழுதது அந்தப் பெண்குரல். தொடர்ந்து இராணுவத்தினர் கதைக்கும் சத்தமும் கேட்டது. நம்பிக்கையின்றி, எங்களுக்காக இருன்னுமொரு உயிரா! என எண்ணிக்கொண்டிருந்த வேளை, அப்பெண், அவர் ஒரு வைத்தியர், அழுகையுடன் ”தப்பியிருப்பவர்கள் கையை உயர்த்திக்கொண்டு வெளியில் வாங்கோ” எனச் சொன்னார். என்ன செய்வதென்று புரியவில்லை. மருத்துவர் பொன்னம்பலம் அவர்கள் உட்பட பல வைத்தியர்களும் அந்த அறையில் இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகின்றது எனத் தெரியாமல் எழும்பி நடக்கத் தொடங்கினார்கள். நானும் கைகளை உயர்த்திக் கொண்டு பார்க்க, அந்தக் கொறிடோரில் இறந்த உடல்கள் இங்குமிங்குமாகக் கிடந்தன. ஒருவருக்கு மேல் ஒருவர் வீழ்ந்து கிடந்தனர். கால்வைத்து நடக்க இடமில்லை, இரத்தம் உறைந்து சேறு போல இருந்தது. இறந்தவர்களின் உடல்கள் விங்கியிருந்தன. அம்மாவும் தம்பியும் எழுந்து கையை உயர்த்திக் கொண்டு நின்றனர். முன்பக்கம், மேல்மாடிப் படிகளுக்கு அருகில் கிடந்த பிணங்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த பரலின்மேல் கொக்கோக்கோலாக் கேஸ்; ஒன்று இருந்தது. அதற்கு அருகில் சீக்கியச் சிப்பாய் துப்பாக்கியை உயர்த்தியபடி நின்றான். சோடா குடிச்சுக்குடிச்சுத்தான் எல்லோரையும் இரவிரவா சுட்டிருக்கிறானா! என நினைத்தேன். இரத்த வெள்ளத்தில் படுத்திருந்திருந்த பிரியா பலவீனமான குரலில் கூப்பிட்டார். அவரை நோக்கி அடி எடுத்து வைக்க முன்னர், துப்பாக்கியை நேரே பிடித்தபடி நின்ற இந்திய சீக்கியப்படையினன் நட என அதட்ட, கண்களினால் ஆற்றாமையையும் பயத்தையும் வெளிப்படுத்தி எந்த நம்பிக்கையுமற்று எல்லோருடனும் கையை உயர்த்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். அங்கு கிடந்த உடல்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் காலை வைத்தபோது உறைந்த இரத்தம் கணுக்கால் வரை தொட்டு நின்றது. அடிப்பாதத்தில் உடைந்த எலும்புகளும் தசைகளும் மிதிபட்டது போன்ற உணர்வு. மிக மோசமான இரத்தவாடை. அப்படியே பார்த்துப்பார்த்து நடந்து சென்றோம்.
கொறிடோரின் வாசலில் வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம், அருகில் கிடந்த தாதிகளின் உடலைப் பார்த்தபோது, காலையில் எங்களைக் காப்பாற்ற வந்து இறந்தவர்கள் இவர்கள்தான் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பல உடல்களும் அந்தப்பகுதியை நிறைத்திருந்தன. நோயாளார் வண்டியில் படுத்திருந்த நோயாளர்கள் அந்த வண்டிகளிலேயே கொல்லப்பட்டுக் கிடந்தனர். விழுந்து சாமி கும்பிடுவதைப்போல பலர் கும்பிட்டபடியே இறந்திருந்தனர். நோயாளர் வண்டி ஒன்றில் தனது குழந்தையை கிடத்தியிருந்த தாய் அந்தக் குழந்தையை கட்டிப்பிடித்தபடியே இறந்து போய் கிடந்தார். மகளைத் தனது உடலுக்கு அடியில் மறைத்துக் கட்டிப்பிடித்தபடி இறந்திருந்த தகப்பன் என ஆங்காங்கு சுடப்பட்டு இறந்திருந்த உடல்கள், திகிலடைய வைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு, அம்மாவும் நானும் மூன்றாவது தம்பியும் நண்பனுமாக இருபத்தி ஆறாவது வாட்டிற்குள் வந்து சேர்ந்தோம். அம்மா, அப்பாவையும் மற்றைய இரு தம்பிகளின் பெயரையும் கூறிக் கதறி அழுது கொண்டே வந்தார். சிறிது நேரத்தில் பிரியாவையும் நோயாளர் விடுதிக்கு கொண்டு வந்து சிகிச்சை கொடுத்தார்கள். அப்பகுதியில் உயிருடன் இருந்த அனைவரும் வந்து விட்டனர், ஏனையோர் இறந்துவிட்டார்கள் என சொன்னார்கள். அப்பாவும் இரண்டு தம்பிகளும் வரவில்லை.
அப்போது அலுவலக அறையில் இருந்து காயப்பட்டு வந்த ஊழியர் ஒருவரிடம் அப்பா எங்கே என்று கேட்டபோது, ’கடைசித்தம்பிக்கு காயம். அவருக்கு நிறைய இரத்தம் போய் தண்ணி கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா கொஞ்சம் பொறுத்துக் கொள்ளப்பு எண்டு சொன்னார். ஆனால் அவனால் அதைத் தாங்க முடியேல்லை சின்னப்பிள்ளைதானே, இரத்தம் அதிகமா வெளியேறிக் கொண்டிருந்ததால் தாகத்தை அடக்க முடியாமல் மீண்டும் தம்பி தண்ணியை கேக்க, அப்பா மேசையில் இருந்த தண்ணியை எடுத்துக் குடுக்க மெதுவாக எழும்பினவர். அப்ப யன்னல் பக்கமாக இருந்து சுடப்பட்டதில் அப்பிடியே விழுந்தவர்தான். அவற்றை சத்தம் அதுக்குப் பிறகு கேக்கேவே இல்லை, அப்பதான் எனக்கும் சூடுபட்டது, வரக்கிலதான் பாத்தன் அப்பா இறந்திருந்தார். நான் மற்றத் தம்பியைக் காணவில்லை, காயப்பட்ட தம்பி மயங்கிக் கிடந்தான், என்னால தூக்கவர ஏலாமல் போயிட்டுது” என்றார். இரவு வேளை இடையிடையே கேட்ட வெடிச்சத்தத்தில் ஒன்று என் அப்பாவையும் பலிகொண்ட வேட்டொலி என்பது புரிந்தது. மரண வீட்டு ஓலங்கள் அந்த நோயாளர் விடுதியில் பரவியிருந்தது. அப்பா இறந்துவிட்டார். காயமடைந்தவர்களை கொண்டு வந்த ஊழியர்களும் அங்கு இனியாரும் உயிருடன் இல்லை என்றனர். மேலும் அந்த கட்டிடப்பகுதிக்கும் அப்பாலும் பலரது உடல்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள்.
தம்பிகள் இருவருக்கும் என்ன நடந்தது என்பது புரியவில்லை. அலுவலக அறையிலிருந்து ஒவ்வொருவரிடமும் விசாரித்தேன். எங்கும் சரியான பதிலில்லை. இரவு வந்துவிட்டது. அப்போதுதான், இறந்தவர்களின் உறவினர்கள் இருந்தால் அங்கு சென்று சடலங்களை இனங்காணுமாறு இந்திய இராணுவத்தினர் சொன்னார்கள். பதைபதைப்புடன் அங்கு சென்றோம்.
கும்மிருட்டு, ஆங்காங்கு சடலங்கள், அப்பா இருந்த அலுவலகத்திற்குச் சென்று, டோச் வெளிச்சத்தில் தேடிப் பார்த்தபோது அப்பாவின் உடல் குப்பற கிடந்தது, அப்பா படுத்திருக்கிற மாதிரியே கிடக்கிறார் என அம்மா கத்தியழுதார். மெதுவாகத் தொட்டுத் திருப்பினேன். நெத்தியில் குண்டுபட்டு முகம் வீங்கியிருந்தது. நாக்கை பற்களால் கடித்தபடி இருந்தார். இறந்து போயிருந்த அவரின் சடலத்தின் மேல் தலையை அடித்து அம்மா அழுதார்.
அழுது கொண்டே தம்பிகள் எங்கேயென்று கேட்டுக் கதறினார். கடைசித்தம்பி காயப்பட்டிருந்ததாகச் சொன்ன இடத்தைப்பார்த்தேன். அதில் அவனைக் காணவில்லை, அவ்விடத்தில் உடலை இழுத்தால் வரும் அடையாளம் போல நிலத்தில் உறைந்திருந்த இரத்தத்தில் அடையாளம் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை, அம்மா தம்பிகளையும் நினைச்சு கத்தியழுதார். நான் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த ஏனைய சடலங்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினேன். அப்பாவை இழந்த வலி ஒருபுறம், இது தம்பிகளின் உடல்களாக இருக்கக்கூடாது என்ற பதைபதைப்பு ஒருபுறம், ஒவ்வொரு சடலமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய அங்கிருந்த அனைத்து சடலங்களையும பார்த்தேன்.; அவர்களின் உடல்கள் அதில் இல்லை. எங்கே போனார்கள்? எனன நடந்தது? என்ற கேள்வி மனதை அழுத்தியது.
மறுநாள் விடிந்ததும் அங்கிருந்த சடலங்களை வைத்தியசாலையின் பிணவறைக்குப் பக்கத்தில் இருக்கும் பின்பக்க பாதைக்கருகில் போட்டு எரிப்பதற்கு இந்திய அமைதிப்படை தீர்மானித்தது. கட்டைகளை அடுக்கி சடலங்களை அதற்கு மேலே கொண்டு வந்து வைக்கச் சொன்னார்கள். நான் முதற்பிள்ளை என்பதால் அப்பாவுக்கு கொள்ளி வைக்க அனுமதி வாங்கித்தருமாறு கேட்டேன். வைத்தியர்கள் இருவர் இராணுவத்துடன் கதைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்கள்.
அப்பாவின் சடலத்தை நோயாளர் தள்ளுவண்டியில் வைத்து வைத்தியசாலை ஊழியர்களுடன் நானும் தம்பியும் சேர்ந்து தள்ளிக்கொண்டுபோய் பிணவறைக்கு அருகில் நின்றோம். ஓவ்வொரு உடலையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டுவந்தனர் அதில் பலரும் தெரிந்தவர்கள். இறுதியாக ஏற்கனவே இறந்து பிணஅறையில் இருந்தவர்கள் உட்பட எண்பதிற்கும் மேற்பட்ட சடலங்களும் ஒன்றாக, குவியலாக அடுக்கப்பட்டன. அதில் ஒரு ஓரத்தில் அப்பாவின் உடலை தனியாக கிடத்தி நெஞ்சாங்கட்டையை நானும் தம்பியும் வைத்தோம்;. இந்தியச் சிப்பாய் ஒருவன் பேப்பரில் நெருப்பைக் கொழுத்தி அப்பாவிற்கு கொள்ளி வைக்கத் தந்தான்.
நான் அப்பாவிற்கு கொள்ளி வைத்து விட்டு திருப்பி அதை கொடுக்க, அப்பிணக்குவியலைச் சுற்றி நெருப்பு வைக்குமாறு கூறினான். நானும் அவ்வாறே அப்பாவுடன் சேர்த்து அனைத்து சடலங்களுக்கும் நெருப்பை வைத்துவிட்டு தம்பியையும் கூட்டிக்கொண்டு வந்தேன். அனைத்து சடலங்களும் ஒன்றாக எரிய+ட்டப்பட்டன. பின்னர், பிற்பகல் வேளை, அப்பாவுடன் வேலை செய்த ஒருவரின் துணையுடன் அஸ்தி எடுக்கச் சென்றேன். அங்கு சென்று பார்த்தபோது உடல்கள் முழுமையாக எரியவில்லை. அரைகுறையாக எரிந்த நிலையில் கருகியிருந்தன. மரங்களைக் கீழே மட்டும் போட்டு எரித்ததினால் கீழிருந்த உடல்களே எரிந்திருந்தன். மேலேயிருந்த உடல்கள் எரியாமல் இருந்ததுடன் நெஞ்சாங்கட்டை வைத்து எரிக்காததால் சில உடல்கள் நிமிர்ந்தும் இருந்தன. அப்பாவின் உடலின் அரைவாசி எரியாது இருந்தது. உடலின் மேற்பக்கத்தில் எரிந்த இடத்தில் மூன்று இடங்களில் இருந்தும் எரிந்திருந்த எலும்பை உடைத்தும் சாம்பலாக்கி எடுத்;தேன். நேற்று சோறு ஊட்டிய என் அப்பாவை சாம்பலாக எடுத்து பத்திரப்படுத்தி அம்மாவிடம் கொடுத்தேன்.
அதன்பின் வைத்தியசாலையில் ஒளிந்திருக்கக்கூடிய பல இடங்களுக்கும் சென்று தம்பிகளைத் தேடினேன். கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களுக்கு மேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம்;. ஊரடங்குச் சட்டம் இருந்ததால் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பதினைந்து நாட்களாக இருந்த இந்தியப்படையின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் இரண்டு தம்பிகளும் நல்லூர் கோயிலில் இருக்கின்றார்கள் என அங்கிருந்து வந்த வைத்தியர் ஒருவர் கூறினார். எங்களை வைத்தியசாலையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அம்மா நல்லூர் கோயிலுக்குப் போய் அவர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வந்தார். நீண்ட நாட்களுக்குப்பிறகு தம்பிகளைச் சந்தித்தது சந்தோசத்தைக் கொடுத்தது.
கடைசித்தம்பி படுகொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வர பயமாயிருக்கு எனக் கூறி வரமறுத்துவிட்டான். இரண்டாவது தம்பியிடம் ”ஏன் ஓடினீங்கள்?” எனக் கேட்டேன். ”உங்களை ஆமி கையை உயத்திக் கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது. அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! எண்ட பயத்தில எழும்பேல்லை. பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணல்லை. வைத்தியசாலை ஊழியர் ஒராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். அவர் நாங்கள் இங்கயிருந்து தப்பி ஓடுவம் என்றார். நானும், தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப் பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில் இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூரில் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினாக்கினியரிடம் கொண்டுபோய் கொடுத்து நடந்ததைக்கூறினேன் என்றான்”.
>தம்பியும் பிணத்தோடு பிணமாகத்தான் அந்த சம்பவத்தில் உயிர் தப்பியிருந்தான். ”ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்தான் நிண்டனான். அவன் சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்பிடியே அசைவில்லாமல் அவர்களின் உடலுக்கு கீழ கிடந்தன்;. ஆமி பிறகு சுட்டது எனக்குப்படேல. கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது. ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான். எனக்கு ஒன்டும் தெரியவில்லை, நானும் சத்தம்போடாமல் இருந்திட்டன். அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான். எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கர பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன்” எனக்கூறினான்.
அன்றைக்கு வைத்தியசாலை மட்டுமல்ல யாழ்நகரை அண்டிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அன்றிலிருந்து தீபாவளி தினம் வலிகள் நிறைந்த ஒரு நாளாகவே இன்றும் தொடர்கின்றது. இன்றுவரை ஆறாத ரணமாக இருக்கும் சம்பவங்கள் எத்தனை. என் அப்பாவோடு மகிழ்திருந்த காலங்கள், அப்பாவை இழந்து அனுபவித்த வேதனைகள் பல.
எனது அப்பாவுடன் கொல்லப்பட்ட வைத்தியர்கள, பணியாளர்கள் மற்றும் அன்றைய தினம் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவிப் பொதுமக்களின் ஆத்ம சாத்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
அபிஷேகா