காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் 1200 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது.

இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 12.15 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தியவாறும் சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள் என்ற வாசகம் தாங்கிய பதாதையுடன் போராட்டம் மேற்கொண்டிருந்தார்கள்.