யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 39 ம் ஆண்டின் நினைவுகள்

தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 39 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது.

திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்து வந்த சிங்கள இனவாதத் தலைமைகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தமிழரின் அறிவுப் புதையல்களின் பாதுகாப்பிடமாகத் திகழ்ந்த யாழ் பொது நூலகத்தை முற்றிலுமாக அழத்துவிட தீர்மாணித்து முடித்தும் விட்டார்கள்.

தமிழர்களது விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வானது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களது உயர்கல்வி வாய்ப்பிற்கு சாவுமணியடித்த சிங்கள இனவாத அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை சிங்கள இனவெறி பாசிச அரசின் பேய்யாட்டத்திற்கு பறிகொடுத்து 36 ஆண்டுகள் வரலாற்றில் சாம்பலாகிப் போய்விட்டன. அதனை ஈடுகட்ட ஒவ்வொரு தமிழனும் வரலாற்றை பாதுகாத்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க இந்நாளில் அல்ல எந்நாளும் உறுதி ஏற்க வேண்டும் என வரலாற்றுக் கடமையுணர்வுடன் வேண்டி நிற்கின்றது.

*******************

ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பரான நூலகம்

சா.ஆ.தருமரத்தினம்

1972 ஆம் ஆண்டு இலங்கை சோஷலிச குடிரயசு யாப்பினை ஆட்சேபித்தும் நிராகரித்தும் தந்தை செல்வா நிர்ப்பந்தித்து இருந்த காங்கேசன்துறைக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வாவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சிறிமாவோ பண்டார நாயக்கவின் முக்கூட்டரசு வேட்பாளர் தோழர் வ. பொன்னம்பலம் 16,000 அதிகப்படி பெரும்பான்மை வாக்குகளால் தாம் தோற்றகடிக்கப்பட்டதுமே மக்கள் தீர்ப்பை மகேஸ்வரன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்ட தோழர் பொன்னம்பலம் தாம் சார்ந்த இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தமது சகாக்களுடன் விலகியவராக செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் ஓர் இணைந்த அமைப்பாக அதனையும் இணைத்துக் கொண்டிருந்தார்.

ஆகவே, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் எதிர்வரவிருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது போர்த்துகேயரிடம் போரில் இழக்கப்பட்ட தமிழீழ அரசினை மீள் வித்துப் புதுப்பிப்பதற்கு தமிழீழ வாக்காளரிடம் ஆணை கோரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொள்ள முடிவு செய்தது.

எனவே, அந்த ஒரே கோரிக்கையை மட்டுமே பிரஸ்தாபிப்பதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் தோழர் வ.பொன்னம்பலமும் உரிய பங்களிப்பை நல்கியிருந்தார். சம்பந்தப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வாசகம் உரைத்தவாறு கோரப்பட்ட ஆணையைத் தமிழ் மக்கள் வழங்குமிடத்து தெரிவு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து ஒரு சுதந்திர, இறைமையுள்ள, சோஷலிச, ஜனநாயக தமிழீழ அரசை நிறுவும் யாப்பை நிறுவி அதனை எய்த முயலும் சமகாலத்தில் இலங்கையின் பாராளுமன்றத்தையும் மேற்படி இலக்கை எய்துவதற்கான ஒரு மேடையாக உபயோகிப்பார்கள் என்றே உறுதியளித்திருந்தது.

1977 ஆம் ஆண்டு ஜூலைப் பொதுத் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் வாக்காளர் பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்படி கோரிக்கைக்கு ஆதரவாகத் தெரிவு செய்ததன் மூலம் தம்மிடம் கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகவே வழங்கியிருந்தனர்.
ஆயினும், தமிழ் வாக்காளரிடம் கோரிப்பெறப்பட்டிருந்த மேற்படி ஆணையை உதாசீனம் செய்தவர்களாக தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சுதந்திர இறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசிற்கான யாப்பைத் தயாரிக்கும் பணியைத் தவிர்த்து விலக்கியவர்களாக இலங்கை பாராளுமன்றத்தை வெறும் மேடையாகவே மட்டும் உபயோகிக்க தலைப்பட்டதுடன் நில்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் யாப்பிற்கு விசுவாசமுள்ள ஓர் எதிர்க் கட்சியாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர்.

மேலும், சுதந்திர முறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசை நிர்மாணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து பிரதமர் ஜே.ஆர். ஜெயவதனவின் சூழ்ச்சிக்கு இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் டாக்டர் ச.அ. தருமலிங்கம் தலைமையில் “சுதந்திரன்’ ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன் போன்றோர் அதனை ஆட்சேபித்து மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கோரி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய தலைப்பட்டனர். மக்கள் ஆதரவும் அவர்களுக்குச் சார்பாகவே மாறத் தலைப்பட்டது.

அத்தகைய எதிர்ப்புகளின் மத்தியில் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ். நாச்சிமார் கோவில் வீதியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். மாநகர முதல்வர் இராஜா விசுவநாதன் தலைமையில் நடந்து கொண்டிருந்த சமயம், தேர்தலை ஆட்சேபித்து ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதன் நிமித்தம் கட்டுப்பாடுகளை மீறிய காவல்துறையினர் கட்டுமீறி நிகழ்த்திய அனர்த்தங்களால் நாச்சிமார் கோவில் வீதியில் ஆரம்பித்த தீத்தாண்டவம் யாழ். நகரையே தீக்கிரையாக்கிற்று. யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவிருந்த கடைகள் தீயினால் பொசுக்கப்பட்டன. யாழ். பிரதான வீதியில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பணியகம் எரியுண்டது. பாட்டன் மேதரின் வர்த்தக நிறுவனம் மற்றும் டாக்டர் செபஸ்தியாம் பிள்ளையின் இல்லமும் சேதமுற்றன.
இவை அனைத்திற்கும் மேலாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் இல்லம் முழுமையாக எரிந்து சாம்பாராக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனை அவரது மனைவியுடன் அத்தீயில் பொசுக்க மேற்கொள்ளப்பட்ட எத்தனத்தில் இருந்து அற்புதமாக உயிர் பிழைத்த இருவரும் வீட்டின் பின் புற மதிலால் பாய்ந்து ஓடி ஓளிய நேர்ந்தது.

1981 ஆம் ஆண்டு மே 31 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீத் தாண்டவம், மறுநாளான ஜூன் முதல் நாளிலும் தொடர்ந்தது. அன்று நிகழ்த்தப்படவிருந்த பண்பாட்டுப் பேரவை நாடும் உலகமும் அறியவராது தடுக்கும் ஓர் எத்தனமாக முழு யாழ்ப்பாண குடாநாட்டிலும் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு நாளேடான ?ஈழ நாடு? பத்திரிகைப் பணிமனை முதலில் தீக்கிரையாக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்த்தப்பட்டிருந்த அடாவடித்தனமான அட்டூழியங்களையடுத்து காவல்துறையினர் ஓர் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்திருந்தது.

ஜூன் 04 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்லைக் கண்காணிப்பதற்காக தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டிருந்த விஷேட காவல் துறையினர் யாழ்.பொது நூலகத்துக்குப் பின்னால் இருந்த துரையப்பா விளையாட்டரங்கிலும் அதன் முன்னால் இருந்த யாழ். மத்திய கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். யாழ். பொது நூலகத்தையும் துரையப்பா விளையாட்டரங்கையும் அடுத்ததாக வடக்கிற்கான உதவிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையும் நகரின் மத்திய பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தன. நகரிலோ உத்தியோகப்பற்றற்ற ஊரடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை.

இருந்த போதிலும் பொது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினரால் திராவிட சிற்பவியல் பாங்கில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததும் தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும் 98,000 க்கும் அதிகமான புத்தகங்களையும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளை உடையதுமான யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் மனுக்குலத்துக்கே விரோதமான ஒரு குற்றச் செயலாகவும் பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது.

இத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத் தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல! இறுதி நிகழ்வும் அல்ல!! கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல் குமாரயா யாழ்ப்பாணம் இராசதானி மீது படையெடுத்து வந்தபோது நல்லூர் நாயன்மார்க் கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய சரஸ்வதி நூலகம் அது உள்ளடக்கியிருந்த அரும் பெரும் சித்த வைத்திய நூல்களுடன் தீயினால் முற்றாகப் பொசுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராசதானியின் வேந்தர்கள் சிறந்த சித்த வைத்திய நிபுணர்களாக விளங்கியதுடன், தாமே பல மருத்துவ நூல்களை எழுதியிருந்ததும் தெரிந்ததே! ?சரஸ்வதி? நூலகம் அவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

அது வரலாற்றில் முற்பட்ட நிகழ்வாக இருந்தால், யாழ். பொது நூலகம் அழிக்கப்பட்டதன் பின் காஸா நகரில் சுவிடிஸ் மக்களால் அன்பளிப்பாகத் தரப்பட்டிருந்த “குளோப்’ நூலகமும் அவ்வாறே அழிக்கப்பட்டிருந்தது. மேலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது. சென்னை “இந்து’ பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி. பார்த்தசாரதி தமது யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தின் பின் இதனை அதன் செப்டெம்பர் 28 ஆம் திகதிய இதழில் அம்பலப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் தீயில் பொசுங்குவதை யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி மேல் மாடியில் இருந்து காண நேர்ந்த யாழ்ப்பாணத்தின் நடமாடும் நூலகமாகப் போற்றப்பட்டு வந்தவரான பன்மொழிப் புலவர் வண. பிதா தாவீதடிகள் பேரதிர்ச்சியடைந்தவராக மூர்ச்சித்து மரணமானார். இந்த ஜூன் முதல் நாள் அடிகளாரின் இருபத்தேழாவது நினைவு தினமாகும்.

யாழ். அரசாங்க முகவராக அப்போது பதவியில் இருந்த யோகேந்திரா துரைச்சாமி தமது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வாழாது யாழ். மாணிக்கூட்டுக் கோபுரத்தை அடுத்துள்ள தமது தந்தையின் “மகேந்திரா’ இல்லத்திலேயே வசித்து வந்தார். யாழ். பொது நூலகம் எரிந்து கொண்டிருப்பதை யாழ். மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தவர் யாழ். அரசாங்க முகவரே.

தகவல் தெரிந்ததும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காவல்துறையினரின் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மாநகரசபை ஊழியர் சிலரையும் உதவிக்கு உடன் அழைத்துக் கொண்டு ஸ்தலத்துக்கு விரைந்தவர் அங்கு நகர மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, நூலகம் மற்றும் திறந்த வெளியரங்கு காவலர்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் காவல் துறையினரோ அதனை அனுமதியாது அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆகவே, வேறுவழியின்றி மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் காரைநகர் கடற்படையினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்தார். கடற்படையினர் உதவிக்கு விரைந்து வந்திருந்தபோதும் அதற்குள் நூலகம் பெரிதளவு முழுமையாகவே அழிந்துவிட்டது.

ஊர் வாயை உலை மூடியால் மூடும் ஓர் எத்தனம் போன்றே யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே “ஈழநாடு’ பணிமனை முன்கூட்டியே தீக்கி?ரயாக்கப்பட்டிருந்தது.

ஆகவே, யாழ்.பொதுநூலகம் அழிக்கப்பட்டிருந்த காட்சியை நேரில் சென்று கண்டிருந்தோர் புறநீங்கலாக யாழ்.குடாநாட்டினுள் வசித்தவர்களுக்குத்தானும் அச்சம்பவம் செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கோ அச்சம்பவம் வெறும் தகவலாகத்தானும் எட்டியிருக்கவில்லை. எனவே, தலைநகர் கொழும்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளோ இலத்திரனியல் ஊடகங்களோ யாழ். பொதுநூலகத்துக்குச் சம்பவித்திருந்த பேரழிவு குறித்து ஒரு வார்த்தைதானும் பிரஸ்தாபியாதிருந்தமை புரிந்து கொள்ளக்கூடியதே.

சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துகளில் ஒன்றான யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 39 ம் ஆண்டின் நினைவுகள் – [31. 05.1981 — 31.05.2020]