அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து அரை நிர்வாண கோலத்தில் இரு பதின்ம வயதினரையும், படுக்கையறையில் அவர்களின் தந்தையின் சடலத்தையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
பிரிஸ்பேன் நகரில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து வாய்விட்டு கதறும் சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்க தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை , பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர்.
ஒரு அறையில் அரை நிர்வாண கோலத்தில் 17 மற்றும் 19 வயது இளைஞர்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்துள்ளனர். இளைஞர் இருவரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பின்னர் தெரியவந்தது. இன்னொரு அறையில், அந்த இளைஞர் இருவரின் தந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞர்கள் இருவரும் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டதாகவும், பசியால் வாய்விட்டு கதறியதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக அந்த பதின்ம வயதினர் இருவரையும் அவர்களது தந்தை அறையில் பூட்டியே வைத்திருப்பார் எனவும், அந்த குடியிருப்பில் இருந்து எப்போதும் ஒரு அழுகிய வாடை வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இரு பதின்ம வயதினரையும் மருத்துவ உதவியாளர்கள் மீட்டு இளவரசர் சார்லஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், குயின்ஸ்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் Di Farmer தெரிவிக்கையில், நமது சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளைப் பற்றி கேட்பது ஒருபோதும் எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், நோய்வாய்ப்பட்ட இந்த இரண்டு இளைஞர்களுக்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் பராமரிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட அந்த 49 வயதான நபரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று குயின்ஸ்லாந்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.