கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு என சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘கபசுர குடிநீர் போன்ற சிறப்பு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கும் என்பது கட்டுக்கதை. எந்த உணவும் நம்மை கொரோனா வைரசில் இருந்து காப்பாற்றும் என்பதற்கான ஆதாரம் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் கே.கனகவல்லி கூறியதாவது:-
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரைப்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் கொடுத்து வருகிறோம். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவைகளுக்கு கபசுரக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.
அதனால் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கபசுர குடிநீரில் கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் இருப்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கபசுர குடிநீரால் கொரோனா வைரசை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.