நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
அதாவது டாக்டர் ஜோஷியின் மின்னணு தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு உகந்த செயல்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்காகவும் ஜோஷிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 250 காப்புரிமைக்குட்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் ஜோஷி. இதனால் நியூயார்க்கின் மதிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டக் கூட்டமைப்பு இவருக்கு மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வழங்கி கவுரவித்தது.
டாக்டர் ராஜிவ் ஜோஷி மும்பை ஐஐடியில் படித்தவர். உலகப் புகழ்பெற்ற மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலையில் தொழில்நுட்பத்துக்கான எம்.எஸ். பட்டப்படிப்பு முடித்தவர். மேலும் மெக்கானிக்கல் எலெக்ட்ரிக்கல் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இந்த டாக்டர் பட்டத்தை இவர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பெற்றார்.
மின்னணு புராசசர்கள், சூப்பர் கணினிகள், லேப்டாப்கள், ஸ்மார்ட் போன்கள், உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களில் இருக்கும் அமைப்புகளில் இன்றியமையாத பல காப்புரிமைக்குரிய கண்டுப்பிடிப்புகளை டாக்டர் ஜோஷி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.