ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்

அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று பெரும் சுகாதார சிக்கலாகவும் அதன் தொடர்ச்சியாக பயணத் தடைகளும் நடைமுறையில் உள்ள இச்சூழலில், மனுஸ்தீவில் (பப்பு நியூ கினியா) வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 35 பேர் அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 7 அகதிகளும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் தற்போது அமெரிக்காவுக்கு 42 அகதிகள் பயணமாகியுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 700க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற அகதிகளில் நூற்றுக்கணக்கானோர், இன்றும பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இத்தீவுகளில் செயல்படும் தடுப்பு முகாம்கள் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களாக சுட்டிக்காட்டப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.