மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜகபதி பாபு, லால் நடித்த புலிமுருகன் படம் கடந்த 7ந் தேதி மலையாளத்தில் வெளிவந்து வரலாறு காணாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வசூல் சாதனையாக இருந்த த்ரிஷ்யம் படத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை கசின்ஸ், விஷூதன், மல்லு சிங், சவுண்ட் தோமா படங்களை இயக்கிய வைஷாக் இயக்கி உள்ளார். வினு மோகன், சுராஜ், நமீதா, கிஷோர், நந்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புலிவேட்டையை அடிப்படையாக கொண்ட கதை.
சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் ரீமேக் உரிமத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதனை தமிழில் பிரமாண்டமாக ரீமேக் செய்ய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை ஏற்பாடு செய்து வருகிறார். மோகன்லால் படங்களின் ரீமேக்கிற்கு கமல்ஹாசன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அணுகவும் முடிவு செய்திருக்கிறார்கள். இது தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.