ஆஸ்திரேலியாவுக்குள் எப்படியானவர்கள் நுழைய முடியும்?

கொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணத்தடையால், தற்காலிக விசா பெற்ற பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பான்சர் பணி விசாக்கள் மூலம் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு Fletcher என்பவரின் குடும்பம் சென்ற நிலையில், பள்ளித் தேர்வுகளை முடிப்பதற்காக அவரது 16வயது மூத்த மகன் டெயிலர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்திருக்கிறார்.

பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள பெற்றோருடன் இணைய டெயிலர் முயன்ற தருணத்தில் கொரோனா தடைகல் அவரது பயணத்தை சாத்தியமற்றதாக்கியது. 16வயது டெயிலர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய சிறப்பு அனுமதி கோரப்பட்ட போதிலும் அதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய அரசு வழங்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்துடன் டெயிலர் இணைய முடியாத நிலை உண்டாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் படி, ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா பெற்றவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும்.