சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

இதேபோல், அங்கிருந்தும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு. அவ்வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த ஷேன் கிம்புரோ, அன்ட்ரி பொரிசென்கோ மற்றும் ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ்-ஐ சேர்ந்த செர்கெய் ரிழிகோவ் ஆகியோரை அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஒருமாத காலமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இந்த மூன்று விண்வெளி வீரர்களும் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வரும் வெள்ளிக்கிழமை இவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.