‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்

 பொதுமக்களுக்கு ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் போலீசார் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 12 லாரிகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் அந்த லாரிகள் மூலம் வசதியற்ற மக்களுக்கு இலவச உணவு பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

துபாயில் ‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் காவல்  துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ‘கொரோனா’ விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த பணியில் மொத்தம் 12 லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த லாரிகளின் பின்புறம் பொருட்கள் வைக்கும் பெட்டி போன்ற பகுதியின் வெளிப்புறத்தில் ‘கொரோனா’ தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் 7 மொழிகளில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக அரபி, ஆங்கிலம், இந்தி, உருது, பிரஞ்சு, சீனா மற்றும் ரஷிய மொழிகளில் அந்த வாசகங்கள் படங்களுடன் எழுதப்பட்டுள்ளன. உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி 20 வினாடி கழுவுங்கள், முககவசம் அணிந்து வெளியில் செல்லுங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கூட்டம் கூடுவதை தவிருங்கள், உங்கள் முகத்தை கைகளால் தொட வேண்டாம், தும்மும்போது கைக்குட்டையை பயன்படுத்துங்கள், ஏதாவது ஒரு பொருளை தொட்டு விட்டால் உடனே சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் பயன்படுத்திய முககவசம் மற்றும் கையுறைகளை கவனமாக குப்பைத்தொட்டிகளில் அகற்றவும் என்பது போன்ற வாசகங்களும் லாரிகளில் அச்சிடப்பட்டுள்ளன.

அதேபோல் கூடுதலாக ரமலான் மாதத்தையொட்டி இதே வாகனங்கள் மூலம் ஜெபல் அலி, அல் கூஸ், அல் கிஸ்சஸ் மற்றும் ஹோர்லாஞ் ஆகிய இடங்களில் உள்ள தொழிலாளர்கள் முகாம்களில் தங்கி உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டும் வருகிறது.

இதன்மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படுவதோடு, ‘கொரோனா’ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும் என துபாய் காவல்  துறை  தெரிவித்தனர்.