பிரதமருக்கு அனுமதி மறுத்த ஓட்டல் நிர்வாகம்- நியூசிலாந்தில் சுவாரஸ்ய சம்பவம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவருடன் ஓட்டலுக்கு சென்ற போது அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஓட்டல் நிர்வாகம் கூறியது குறித்து காண்போம்…

நியூசிலாந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவர் கிளார்க் உடன் தலைநகர் வெலிங்டனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், பிரதமர் ஜெசிந்தா அங்கு சென்றபோது அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன.

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த ஓட்டல் நிர்வாகம் கூறியது. எந்த விதிமுறைகளையும் மீறாமல், எதையும் மாற்றாமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். பின்னர் இருக்கைகள் காலியானதும் ஓட்டல் ஊழியர்கள் பிரதமரை உள்ளே அழைத்து, உணவு பரிமாறினர்.

இந்த சம்பவத்தில் தங்கள் மீது தான் தவறு உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் விளக்கமளித்துள்ளார். முன்பதிவு செய்யாமல் சென்று விட்டதாகவும், நாட்டின் பிரதமராக இருந்தாலும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைவருக்கும் பொதுவானது தான் எனவும் அவர் கூறினார். மற்றவர்களை போலத்தான் தானும் காத்திருந்ததாகவும், இதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக சேவை செய்யும் ஓட்டல் ஊழியர்களையும் அவர் பாராட்டினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போதைக்கு சமூக இடைவெளி மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பிரதமராக இருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றி காத்திருக்கும்படி அறிவுறுத்திய ஊழியர்களுக்கும், இதனை எளிமையான முறையில் அணுகிய பிரதமருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.