கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் ந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்.
ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு தளத்தை விதைக்கவும் தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்பவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகச் 2009 ஆண்டு வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியிருந்தவர் சுரேஷ்.
இவரின் விடுதலைச் செயற்பாடுகளை நன்கறிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவரின் விடுதலைப் பற்றை மதிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வன்னிக்கு வந்த சுரேஷ் அவர்களை வெளிநாட்டிலிருந்து வருவோரை வரவேற்கும் கிளிநொச்சியில் அமைந்த நந்தவனம் வரவவேற்றது. அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து விசுமடு புளியடியில் அமைந்துள்ள அனைத்துலகத் தொடர்பகத்தில் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனுடன் (கஸ்ரோ) சந்திப்பும் விருந்தோம்பலும் நடைபெற்றன. கனடாவில் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பல மணி நேர உரையாடல்கள் நடைபெற்றன.
சுரேஷ் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்காக 2004 ஆண்டு காலகட்டத்தில் உலகத் தரத்தில் மிக விலையுயர்ந்த கனோன் புகைப்படக் கருவியை (Canon Camera) வாங்கி வந்திருந்தார்.
தேசியத் தலைவருடனான சிறப்பு சந்திப்பும் மறுநாளே ஒழுங்கு செய்யப்பட்டது. தேசியத் தலைவர் அனைத்துலகத் தொடர்பகத்திற்கு வருகை தந்து சுரேஷை சந்திக்கிறார். ஒரிரு மணி நேர உரையாடலும் விருந்தோம்பலும் தேசியத் தலைவரால் வழங்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில் தேசியத் தலைவருக்காக சுரேஷ் கமெரா எடுத்து வந்த விடயத்தைக் கஸ்ரோ அவர்கள் தேசியத் தலைவரிடம் குறிப்பிட்டார். தலைவரும் அக் கமெராவை எடுத்து வரும்படி கஸ்ரோவிடம் தெரிவித்துக்கொண்டு சந்திப்பை முடித்து கொட்டகையிலிருந்து தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் செல்வதற்கு கதைத்துக்கொண்டு வெளியேறினார்.
அப்போது போராளி ஒருவர் கமெராவை எடுத்து வருகிறார். வரும் வழியில் தேசிய தலைவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இம்பிரான் – பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாகவும் இருந்த ரட்ணம் மாஸ்டர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட (பெயர் குறிப்பிட முடியாது) போராளி ஒருவராலும் குறித்த கமெரா பாதுகாப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அக்கமெரா சுரேசின் கைகளில் போராளியால் வழங்கப்பட்டது. குறித்த கமெராவை தலைவர் அவர்களிடம் கையளித்த சுரேஷ், கமெராவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆர்வமாக சுரேசிம் தலைவர் கேட்கவே நின்றநிலையில் உரையாடல் மீண்டும் ஒரு மணி வரை தொடர்ந்தது. கமெராவோ மிகப் பொியது, எடையும் கூடியது, லென்சுகளும் பிரமாண்டமானவை.
இயக்கத்திடமே அத்தரத்தில் கமெரா இல்லை என்பதை தேசியத் தலைவர் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் குறிப்பிடுகின்றார். அதன் பிறகு அக்கமெராவை இயக்குவது குறித்த விளக்ககும் சுரேசால் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது. தலைவரும் அதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் ”என்னை எடுங்கள்” உங்கள் கமெராவின் தரத்தைப் பார்ப்போம் என்று கூறவே சுரேஷ் மிக உச்சாகத்துடன் தலைவரை மாமரத்தின் கீழ் நிறுத்தி படத்தினை எடுத்தார். ஒரு கிளிக் படபடபடபட என சந்தம் சுற்றியிருந்தவர்களை வியக்க வைத்தது. சுரேசும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக படங்களை எடுத்தார்.
பின்னர் எடுத்த படங்களை தலைவரிடம் கமெரா திரையில் சுரேஷ் காண்பிக்கிறார். படங்கள் மிகத்தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்ததைப் பார்த்து தலைவரும் வியந்தார். வியந்தது மட்டுமல்லாமல் சுரேசையும் பாராட்டினார்.
தேசியத் தலைவரை சுரேஸ் எடுத்த படம் அன்றை ஆண்டே அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவால் புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் தமிழ் தாய் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டது மட்டும் அல்லாம் இன்று வரை அப்படம் வெளியீடுகளிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தேசியத் தலைவரும் சுரேசும் இணைந்து நிற்க அக்கமெராவால் போராளி ஒருவர் படம் எடுத்தார்.
தொடர்ந்து உரையாடிய தேசியத் தலைவர்கள் அவர்கள் இக்கமெராவை நிசாமிடம் (அருச்சுனா புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) கொடுக்கும் படி கஸ்ரோவிடம் கூறி சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் வெளிநாட்டிலிருந்து செல்வோர் தேசியத் தலைவருடனான சந்தித்திப்பில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் மயமான புதிய கலாச்சாரமும் அவ்விடத்திலேயே ஆரம்பமாகியது.
தங்கியிருந்த ஒவ்வொருநாளும் தமிழீழ கட்டுமானங்களை பார்வையிட போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் சுரேஷ். அவர் அங்கிருந்த நாட்களில் தமிழர் தாயகத்தின் இயற்கை அழகுகள், மக்கள், வாழ்வியல், புலிகளின் கட்டுமானங்களை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்.
தாயகத்திலிருந்து திரும்புப் போது தனது சொந்த தேவைக்காக எடுத்து வந்த அதே மாதிரியான மற்றொரு கமெராவையும் கஸ்ரோ அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார். அக்கமெரா வெளிநாடுகளிலிருந்து சென்ற தழிழர் ஒருங்கிணைப்புக்குச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தேசியத் தலைவருடனும், கஸ்ரோ அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதற்கு நிலவன் என்ற போராளியால் இறுதி வரை பயன்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.
கனடா திரும்பியதும் தாயக நோக்கிய வேலைத் திட்டங்களை இறுதி வரை முன்னெடுத்தார். 2004 ஆம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவரும் சுரேஷ் அவர்களே.
தாயகத்தில் எடுத்த புகைப்படங்களை சுரேன் என்ற இணையத்தில் மக்கள், வாழ்வியல், செஞ்சோலை, அறிவுச்சோலை, நவம் அறிவுக்கூடம், மயூரி இல்லம், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பொதுவெளியில் பார்வையிடக்கூடிய படங்களை தரவேற்றம் செய்திருந்தார்.
தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளனான சுரேஷ் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர் ஆற்றிய விடுதலைப் பணிக்கு தலை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம்.
மீளும் நினைவுகளுடன்
-அகராதி-