முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொண்ட முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையுமே தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒருவாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திவந்தனர். அவர்களை பெின்தொடர்ந்த காவல் துறை நினைவேந்தல் மேற்கொள்வதை தடுத்துவந்தனர். இதன் தொடர்ச்சியாக பொலிசார் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையியே இவ் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதற்கான கட்டளை காவல் துறையால் இன்று இரவிரவாக தங்களுக்கு வழங்கப்பட்டதாக தனிமைப்படுத்தப்படவுள்ள சிலர் தெரிவித்தனர்,
தனிமைப்படுத்தப்படவுள்ளவர்கள் விபரம் வருமாறு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன்
தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
சட்ட ஆலோசகா் சுகாஸ்
சட்ட ஆலோசகா் காண்டீபன்
யாழ் மாநகரசபை உறுப்பினா் பாா்த்தீபன்
யாழ் மாநகரசபை உறுப்பினா் தனுசன்
யாழ் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன்
விஸ்ணுகாந்
சுதாகரன்
தமிழ்மதி
ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடா்பான கடிதம் சற்று முன்னா் பொலிஸாரால் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal

