மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலை

மெக்ஸிக்கோவின் வடக்கு சோனோரா மாநிலத்தில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஜோர்ஜ் ஆர்மெண்டா என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

சோனோரா மாநிலத்தில் சியுடாட் ஒப்ரிகானிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சோனோராவின் சட்டமா அதிபர் அலுவலகம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு நகராட்சி காவல்துறை அதிகாரியும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தும் உள்ளார்.

இதேவேளை சோனோரா மாநில ஆளுநர் கிளாடியா பாவ்லோவிச் அரேலானோ, கண்டிக்கத்தக்க தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஃப் என்ற ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் பன்னாட்டு அரச-சார்பற்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, 2020 இல் மெக்ஸிகோவில் கொல்லப்பட்ட மூன்றாவது ஊடகவியலாளர் ஆர்மெண்டா ஆவார்.

ஏப்ரல் 2 ஆம் திகதி காணாமல்போன பின்னர் ஊடகவியலாளர் விக்டர் பெர்னாண்டோ அல்வாரெஸின் உடல் ஏப்ரல் 11 ஆம் திகதி மெக்ஸிகோவின் அகபுல்கோ துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மார்ச் மாதம் கிழக்கு மாநிலமான வெராக்ரூஸில் தனது காரில் ஏறும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மரியா எலெனா ஃபெரலைத் தொடர்ந்து இந்த ஆண்டு மெக்ஸிகோவில் கொலை செய்யப்பட்ட இரண்டாவது ஊடகவியலாளர் என அவர் உறுதிப்படுத்தப்பட்டார்.

2019 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவில் 10 ஊடகவியலாளர்கள் கொலப்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.எஃப். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.